Published : 29 Jun 2017 08:25 PM
Last Updated : 29 Jun 2017 08:25 PM

குட்கா விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்

பான் மசாலா, குட்கா விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் குறித்து உண்மைக்கு மாறான பல கருத்துக்கள் எனக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஒரு சில நபர்களால் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.

குட்கா மற்றும் பான் மசாலா பற்றிய ஒரு உண்மை கண்ணோட்டம் இதோ : -

* புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுக்கும் வண்ணம், புகையிலை மற்றும் நிக்கோட்டினை சேர்மான பொருளாகக் கொண்ட குட்கா, பான்மசாலா மற்றும் வேறு எந்த சுவைக்கும் பொருளையும் தயாரிக்கவும், சேமிக்கவும், விற்பனை செய்யவும் தடைவிதித்து 23.05.2013 நாளிட்ட தமிழக அரசிதழில் வெளியிட்டது

*குட்கா, பான்மசாலா போன்றவற்றிற்கான தடையை சீரிய முறையில் நடைமுறைப்படுத்த ஏதுவாக அந்தந்த மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சுங்கவரி அலுவலர், துணை இயக்குநர் சுகாதார பணிகள், மண்டல போக்குவரத்து அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், நகராட்சி / மாநகராட்சி அலுவலர்கள், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

* மேற்கண்ட கண்காணிப்பு குழுவின் ஒத்துழைப்புடன் உணவு பாதுகாப்புத் துறை எடுத்த நடவடிக்கையின் பயனாக ஏப்ரல் 2017 வரை தமிழகத்தில் 544.59 டன்னுக்கும் அதிமான குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் 2ரயில்வே போலீஸாரின் ஒத்துழைப்புடன் சுமார் 80 டன்னுக்கும் மேலான குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

* பிற மாநிலங்களிலிருந்து சம்பர்கிராந்தி ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 75 கார்ட்டன்கள், மதுரை ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

* தமிழகம் முழுவதும் ஏப்ரல் 2017 வரை 6,17,997 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 81,796 கடைகள் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* சுமார் 15.38 கோடி ரூபாய் மதிப்புள்ள 544.59 டன் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* குட்கா மற்றும் பான் மசாலாவின் மீதான தடையாணை 23.05.2017 முதல் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சில நாளேடுகளிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள மாதவ்ராவ் என்ற நபரை நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே இதுவரை சந்தித்தது இல்லை.

என்னைப் பிடிக்காத சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தவறாக பரப்பி என்னை அழித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். இதுபோன்ற பல பிரச்சினைகளை எனது அரசியல் வாழ்வில் ஏற்பட்டபொழுதும் அவற்றையெல்லாம் கடந்து தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறேன்.

எனக்கு மடியில் கனமில்லை எனவே, வழியில் பயமில்லை. இந்த பிரச்சினையையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x