Published : 29 Jun 2017 09:50 AM
Last Updated : 29 Jun 2017 09:50 AM

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் தமிழக போலீஸார்: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

தமிழக காவல்துறையில் சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

பாஜக ராமநாதபுரம் நகர பொதுச் செயலர் அஸ்வின் குமார் மற்றும் அவரது தந்தையை தாக்கியவர்களைக் கண்டித்து, ராமநாதபுரம் அரண்மனை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.முரளிதரன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: அஸ்வின் குமார் தாக்கப்பட்ட சம்பவத்தில், பொய் வழக்கு பதிந்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவரின் தலையீடு இதில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தி, உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் கூட நல்லது. இதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தான் கீழடி அகழ்வாராய்ச்சிக்குத் தடை செய்வதாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளது தவறான கருத்து. காவல்துறையினர் சிலை கடத்தலிலும் ஈடுபட்டுள்ளது வெளிச்சமாகியுள்ளது. இதற்கு திமுகவும் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் ஆட்சியில்தான் சிலை கடத்தல் தொடங்கியுள்ளது. காவல்துறையில் சில பேர் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதும், உடந்தையாக இருப்பதும் தமிழக மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

மு.க.ஸ்டாலின் முறையான எதிர்க்கட்சித் தலைவராக செயல்படவில்லை. நதிகளை இணைக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸிடம் இதை திமுக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பார்கள். நீட் தேர்வில், தமிழகத்துக்கு ஏற்ப இடஒதுக்கீடு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x