Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM
சி.எம்.பி.டி. மெட்ரோ ரயில் நிலையத்தில் 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. இறுதிக்கட்டப் பணிகளும், உள்அலங்காரமும் நடைபெற்று வருகிறது.
மெட்ரோ ரயில்
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், இரு வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதையாகவும், பறக்கும் பாதை யாகவும் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு - பரங்கிமலை இடையே 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்தப் பாதையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோயம்பேடு பணிமனையில் நிர்வாகக் கட்டிடம், கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
90 சதவீத பணிகள் நிறைவு
கோயம்பேடு - பரங்கிமலை இடையே கோயம்பேடு, சி.எம்.பி.டி., அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், பரங்கிமலை ஆகிய 8 பறக்கும் ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இதில், கோயம்பேடு, சி.எம்.பி.டி., அரும்பாக்கம் ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டன. சி.எம்.பி.டி. ரயில் நிலையத்தில் 8 எஸ்கலேட்டர்கள், 3 லிப்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேற்கூரை அமைக்கப்பட்டுவிட்டது. தண்டவாளத்தில் மின்கம்பங்கள் பதிக்கப்பட்டுவிட்டன. மெட்ரோ ரயிலையும், மின் வயரையும் இணைக்கும்் தடிமனான மின்கம்பியை அமைக்கும் பணி கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை நடக்கிறது.
மொத்தத்தில் சி.எம்.பி.டி. மெட்ரோ ரயில் நிலையத்தில் 90 சதவீத பணிகள் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளும், உள்அலங்காரப் பணிகளும் நடக்கின்றன.
மேலும் 2 ரயில்கள்
பிரேசில் நாட்டில் இருந்து கோயம்பேடு பணிமனைக்கு வந்த முதலாவது மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பிரேசிலில் இருந்து கப்பல் மூலம் சென்னை துறை முகம் வந்த 8 பெட்டிகள் கொண்ட 2 மெட்ரோ ரயில்கள், டிரைலர் லாரிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கோயம்பேடு பணிமனைக்கு எடுத்து வரப்பட்டன. அடிப்படை சோதனைகள் முடிந்ததும், இந்த 2 ரயில்களும் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT