Published : 24 Jun 2017 08:52 AM
Last Updated : 24 Jun 2017 08:52 AM
கீழடி அகழாய்வுப் பணியில் கண் டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட் களை காட்சிப்படுத்த, தமிழக அரசு ஒதுக்கும் இடத்தில் அருங்காட்சி யகம் அமைக்க மத்திய தொல்லி யல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கனி மொழி மதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:
மதுரையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2,000 ஆண்டுகள் பழமையான 5,300 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கரில் பழங்காலப் பொருட்கள், ஆவணங்கள் புதைந் துள்ளன. ஆனால், ஒரு ஏக்கர் பரப் பளவில்தான் ஆய்வுகள் நடைபெற் றுள்ளன. கீழடியில் அகழாய்வுப் பணியை தொடரவும், கீழடியில் அருங்காட்சியம் அமைத்து பழங் காலப் பொருட்களை காட்சிப்படுத்த வும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வு நேற்று விசாரித்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.புகழேந்தி வாதிடும்போது, “கீழடி அருகே அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. விதிமுறைப்படி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை மத்திய அரசுதான் மேற்கொள்ளும். தேவையெனில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கவும் தயாராக உள்ளோம்” என்றார்.
இதையடுத்து, “கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளது. அப்படியிருக்கும்போது அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறை தயங்குவது ஏன்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், “கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதில் தொல்லியல் துறைக்கு ஆட்சேபம் உள்ளதா?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மத்திய தொல்லியல்துறை சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர், “சிவகங்கை மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்க ஆட்சேபம் இல்லை. ஆனால், உடனடியாக அருங்காட்சி யகத்தில் பொருட்களை வைக்க முடியாது. அகழாய்வில் எடுக்கப் பட்ட பொருட்களின் ஆய்வு முடி வடைந்து, அறிக்கை பெறப்பட்ட பிறகே அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, “கீழடியில் எடுக்கப் பட்ட பழங்காலப் பொருட்கள் தற்போது எங்கு உள்ளன?” என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, “50 சதவீத பொருட்கள் கீழடியிலும், எஞ்சிய பொருட்கள் பெங்களூருவிலும் உள்ளன” என்று தொல்லியல் துறை வழக்கறிஞர் தெரிவித்தார்.
பின்னர், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியது: தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்கும் கடமை தமிழக அரசுக்கு உண்டு. அருங்காட்சியகம் அமைப்பதில் தமிழக அரசின் பங்கும் இருக்க வேண்டும். இடம் மட்டும் கொடுத் தால் போதாது, வேறு பல உதவி களையும் மாநில அரசு செய்து தர வேண்டும். கீழடியில் தமிழக அரசு ஒதுக்கும் இடத்தில் அருங் காட்சியகம் அமைக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அதிகாரியை மாற்றியதற்கான காரணம் என்ன?
வழக்கறிஞர் கனிமொழி மதி தாக்கல் செய்த பொதுநல மனுவில், கீழடியில் அகழாய்வுப் பணிகளை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர் நடத்தி வந்தனர். 3-ம் கட்ட ஆய்வுப் பணியை தொடங்கும் நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணா, அசாம் மாநிலத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
அகழாய்வுப் பணியில் முக்கியமான பணி பழங்கால பொருட்களின் உண்மையான காலத்தைக் கண்டறிவது (ரிப்போர்ட் ரைட்டிங்) ஆகும். இதில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பாளருக்கு அனுபவம் கிடையாது. எனவே அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் கீழடி அகழாய்வுப் பணியைத் தொடர அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனு தொடர்பாக மத்திய தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரல், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர், தமிழக தொல்லியல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT