Published : 19 Nov 2013 12:00 AM
Last Updated : 19 Nov 2013 12:00 AM
ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிருப்தியில் உள்ள அதிமுக தொண்டர்களின் வாக்குகளை திமுக.வுக்கு திசை திருப்பும் திட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
வரும் டிச.4-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுவதை யொட்டி, அதிமுக, திமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர் சரோஜாவுடன், அமைச்சர்கள் கூட்டம் வீதிவீதி யாகச் சென்று, வாக்கு சேகரித்து வருகிறது. திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேமுதிக ஆதரவு யாருக்கு?
இந்தத் தேர்தலில், ஆளுங்கட்சியான அதிமுக-வுக்கு நேரடிப் போட்டியாக திமுக களமிறங்கியுள்ளது. தேமுதிக தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்துள்ள நிலையில், அந்தக் கட்சி தொண்டர்களின் வாக்கு களைப் பெற இவ்விரு கட்சிகளும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
திமுக வேட்பாளர் மாறனுக்கு பக்கபலமாக எம்.பி. செல்வகணபதி தலைமையில், மாவட்டச் செயலர்களும், முன்னாள் அமைச்சர் களும் சூடுபறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, அதிமுக புறநகர் மாவட்டச் செயலர் பொறுப்பும் வகிப்பதால், ஏற்காடு இடைத்தேர்தலில் பெரும் வெற்றி பெற தீவிர முயற்சி மேற்கொண்டு கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியின் ஆதரவு பெற்ற மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவரும், ஜெயலலிதா பேரவைச் செயலருமான இளங்கோவனின் ஆதிக்கம் காரணமாக சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே பல்வேறு சங்கடங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
தேர்தலுக்கு முன்பு, அவர் கைகாட்டுபவர்களுக்கே டாஸ்மாக் பார் ஏலம் முதல் கட்டட ஒப்பந்தம் வரை கிடைத்தது. இதுபோன்ற பலன் கிடைக்காத ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், இளங்கோவனின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும். அவரால் பயன்பெற முடியாதவர்கள், மீண்டும் அதே நிலைக்குத் தள்ளப் படக்கூடிய சூழல் ஏற்படும் என சிலர் கருதுகின்றனர். இதுபோன்ற காரணத்தால், அதிமுக.வில் அதிருப்தியில் உள்ளவர்களை, திமுக பக்கம் இழுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
செல்வகணபதிக்கு முக்கிய பொறுப்பு
தற்போது, ஏற்காடு இடைத்தேர்தல் பணிக்குழுவில் முக்கியப் பொறுப்பேற்றுள்ள செல்வகணபதி, அதிமுக நிர்வாகி களுடனும் தொடர்பில் இருக்கிறார். ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில், செல்வகணபதிக்கு தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவிக்கக்கூடிய அதிமுக-வினர் மூலம், அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை திமுக பக்கம் திசை திருப்பி வாக்குகளைப் பெற அதிக வாய்ப்புள்ளது.
அதிமுக அமைச்சர்கள் அனைவரும் களத்தில் இறங்கியுள்ள நிலையில், எம்.பி. செல்வகணபதி ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று, தெருமுனைப் பிரச்சாரம் செய்வதும், அங்குள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பழைய பாசத்துடன் அணுகியும் வாக்கு சேகரிக்கும் வியூகம் எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்பது தேர்தல் முடிவுக்குப் பின்னர் தெரியவரும்.
ஆளுங்கட்சிக்கு சவாலாக உள்ள ஏற்காடு இடைத்தேர்தலில், வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பிரச்சாரம் செய்துவரும் அதிமுக நிர்வாகிகள், சொந்தக் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களையும், எம்.பி. செல்வகணபதியின் ஆதரவாளர்களையும் எவ்வாறு சமாளித்து வெற்றிக் கனியை ருசிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT