Published : 15 Oct 2013 03:53 PM
Last Updated : 15 Oct 2013 03:53 PM

மக்கள் மனதில் தி.மு.க. என்றுமே ஆளுங்கட்சி - ஸ்டாலின் பேச்சு

ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும், மக்களுக்கான சேவையில் அக்கறை காட்டுவோம். தமிழகத்தில் தி.மு.க. எதிர்க்கட்சியாகக் கூட இல்லை. ஆனால், மக்கள் மனதில் என்றும் ஆளுங்கட்சியாக உள்ளது என்று ஏற்காடு இடைத்தேர்தல் வேட்பாளர் வெ. மாறனை அறிமுகம் செய்துவைத்துப் பேசுகையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் வலசையூரில் திங்கள்கிழமை நடந்தது. மாவட்டப் பொறுப்பாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் காந்திச்செல்வன், எம்.பி., செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேட்பாளர் மாறனை அறிமுகம் செய்து ஸ்டாலின் மேலும் பேசியது:

இந்த இடைத்தேர்தல், ஆட்சி மாற்றத்தையோ; ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தேர்தலோ அல்ல; ஆளுங்கட்சியின் தவறுகளைத் திருத்த வந்த இடைத்தேர்தல். தி.மு.க. தலைவர் கருணாநிதி, கட்சி பாகுபாடின்றி, சுயமரியாதையை சற்றே ஒதுக்கிவைத்து, பல்வேறு கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

எந்த நோக்கத்துக்காக தி.மு.க. தேர்தலில் போட்டியிடுகிறது என்பதை எண்ணி, வெற்றி பெற்றிட ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். தேர்தல் பணியை முறைப்படுத்தி திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.

பத்திரிகைகள் திட்டமிட்டே தி.மு.க.வுக்கு எதிராக செய்திகள் வெளியிடுகின்றன. தி.மு.க.வை எதிர்த்து செய்தி வெளியிடுவது பரவாயில்லை. ஆனால், ஆளுங்கட்சியின் முறைகேடுகளையும், அவலங்களையும் எழுதாமல் இருப்பது ஏன். தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடாது என்று எண்ணுவோருக்கு சம்மட்டி அடி கொடுப்பதாக இந்த இடைத்தேர்தல் வெற்றி அமையும்.

இந்த இடைத்தேர்தலில், காவலர்களை ஏவி ஆளுங்கட்சி மிரட்டும். அதற்கு சற்றும் அஞ்சிடத் தேவையில்லை. சட்டரீதியான தாக்குதலை சமாளிக்க வழக்கறிஞர் அணி தயாராகவே உள்ளது என்றார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x