Published : 29 Oct 2013 10:08 AM Last Updated : 29 Oct 2013 10:08 AM
அமெரிக்க கப்பலில் கைதானவர்கள் விசாரணையில் மவுனம்
அமெரிக்க ஆயுதக் கப்பலில் கைதானவர்கள், போலீஸ் விசாரணையில் எந்த தகவலும் தெரிவிக்காததால், ஒரு நாளுக்கு முன்னதாகவே, அவர்கள் மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் அமெரிக்க ஆயுதக் கப்பல் சிறை பிடிக்கப்பட்ட விவகாரத்தில், கப்பலின் தலைமைப் பாதுகாப்பு அலுவலர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பால் டேவிட் டென்னிஸ் டவர்ஸ், மாலுமிகள் மகாராஷ்டிரா மாநிலம் லாலிகுமார் குராங், உத்திரபிரேதச மாநிலம் ராதேஷ் தார் திவேதி ஆகியோரை, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர்மன்றம், கடந்த 24-ம் தேதி அனுமதி அளித்தது.
இதையடுத்து, மூவரையும் கியூ பிரிவு போலீஸார், காவலில் எடுத்து கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தினர். கியூ பிரிவு ஐ.ஜி. கண்ணப்பன், எஸ்.பி. பவானீஸ்வரி ஆகியோர் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.
போலீஸ் காவல், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு தான் முடிவடைகிறது. இருப்பினும் அவர்களை கியூ பிரிவு போலீஸார் திங்கள்கிழமையே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை மீண்டும் நீதிமன்ற காவலில் வைக்க, முதலாவது நீதித்துறை நடுவர் சி. கதிரவன் உத்தரவிட்டார். மூவரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பால் டேவிட் டென்னிஸ் டவர்ஸ் மட்டும் சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் எனத் தெரிகிறது.
தகவல் கிடைக்கவில்லை...
மூவரிடமும், நான்கு நாட்கள் தீவிர விசாரணை நடத்தியும், கப்பலில் இருந்த ஆயுதங்கள் தொடர்பாகவும், கப்பல் இந்திய எல்லைக்குள் வந்ததற்கான காரணம் குறித்தும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை என, கியூ பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனவே, மேற்கொண்டு அவர்களிடம் விசாரிப்பதால் எந்த பயனும் இல்லை என்பதால், அவர்களை ஒரு நாள் முன்கூட்டியே நீதிமன்றத்தில், போலீஸார் ஆஜர்படுத்தினர்.
இதற்கிடையே கப்பலில் கைது செய்யப்பட்ட 35 பேரின் இ-மெயில் முகவரிகளையும் போலீஸார் சேகரித்துள்ளனர். இந்த இ- மெயிலில் இருந்து, யார் யாருக்கு, என்னென்ன தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன, யார் யாரிடம் இருந்து என்னென்ன தகவல்கள் வந்துள்ளன என்பது குறித்து போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
35 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு...
இதனிடையே, அமெரிக்க ஆயுத கப்பலில் கைது செய்யப்பட்ட 35 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தூத்துக்குடி நீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.
இக்கப்பலில் இருந்த 10 மாலுமிகள், 25 பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை கியூ பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கப்பலில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) பால்துரை முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
WRITE A COMMENT