Published : 18 Nov 2013 09:08 AM Last Updated : 18 Nov 2013 09:08 AM
கனமழை: தமிழகத்தில் மின்வெட்டு நேரம் குறைப்பு
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மின் வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3,000 மெகாவாட் வரை உற்பத்தியாகும் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் முடிந்ததால், மீண்டும் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது.
மேலும், மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி., மற்றும் கைகா, கல்பாக்கம் அணு மின் நிலையங்களில் பல அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாலும், மின் தட்டுப்பாடு அதிகரித்தது.
இதனால் கடந்த வாரம் முழுவதும், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை மின் வெட்டு அமலானது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில், காற்றழுத்த தாழ்வு நிலையால், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மின் தேவை 2,000 மெகாவாட் வரை குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப் படி, மின்சாரத் தேவை 9,450 மெகா வாட்டாக இருந்தது. இதில் 900 மெகா வாட் மின்சாரம், சுழற்சி முறையி லான குறைந்த அளவு மின் வெட்டால் சமாளிக்கப்பட்டது.
காற்றாலையிலிருந்து நேற்று காலையில் ஒரு மெகாவாட்கூட மின் உற்பத்தி செய்யவில்லை. நீர் மின் நிலையங்களிலிருந்து 750 மெகாவாட், தமிழக அனல் மின் நிலையங்களிலிருந்து 2,270 மெகாவாட், மத்திய மின் நிலையங்களிலிருந்து, 2,450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. வெளிச்சந்தையில் 600 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டதாக மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழையால், மின் விசிறி, குளிர்சாதனப் பெட்டிகளின் இயக்கத்தின் தேவை குறைந்ததால், மின்சார அளவும் குறைந்ததாக மின் துறை அதிகாரிகள் கூறினர்.
WRITE A COMMENT