Published : 29 Jun 2017 10:11 AM
Last Updated : 29 Jun 2017 10:11 AM
பழநி அருகே சென்ற மினிலாரி ஒன்றில் போதிய வசதிகள் இன்றி கன்றுகள் ஏற்றிச் செல்லப்பட்டதாக கூறி, அவற்றை வழிமறித்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதால் பதற்றம் உருவானது. இதனால், இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அதிரடிப் படையினர் தடியடி நடத்தினர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை யில் இருந்து, திண்டுக்கல் மாவட்டம் பழநி வழியாக பொள்ளாச்சி அருகேயுள்ள தேவனூர்புதூருக்கு மினிலாரியில் 7 பசுங்கன்றுகளை நேற்று சிலர் ஏற்றிச் சென்றனர். பழநி புறவழிச்சாலையில் மினிலாரி சென்றபோது எதிரே காரில் வந்த ஜீயர் ஒருவர், கன்றுகளை ஏற்றிவந்த மினிலாரியை மறித்து, பழநி காவல்நிலையத்தில் ஒப் படைத்தார். போதிய வசதிகள் இன்றி கன்றுக்குட்டிகளை மினிலாரியில் ஏற்றிச் சென்றதாக புகார் அளித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலைச்சிறுத்தைகள், கம் யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் பழநி காவல்நிலையம் முன்பாக திரண்ட னர். மினிலாரியை விடுவிக்கக் கோரி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜீயருக்கு ஆதரவாக பாஜக மற்றும் இந்து அமைப்பினர் காவல்நிலையம் முன்பு திரண்டனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
கல்வீசி தாக்குதல்
புகார் கொடுத்துவிட்டு ஜீயர் வெளியேறியபோது, அவர் சென்ற வாகனத்தின் மீது ஒரு தரப்பினர் கல்வீசினர். இதில் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து இருதரப்பினரும் கல்வீசித் தாக்கிக் கொண்டதில் பலர் காயமடைந்தனர்.
கல்வீச்சில், பழநியில் இருந்து ஈரோடு சென்ற அரசு பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பிரச்சினை பெரிதாவதை உணர்ந்த போலீஸார் அதிரடிப் படையினரை வரவழைத்தனர். விரைந்து வந்த அதிரடிப் படையினர், காவல் நிலையம் முன்பாக இருபுறமும் திரண்டிருந்தவர்களை தடியடி நடத்தி விரட்டினர்.
இதனால் ஏற்பட்ட பதற்றம் காரண மாக, பழநி நகரில் கடைகள் அடைக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சக்திவேல், நேரில் சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். பழநியில் பதற்றம் நிலவுவதால் போலீஸார் பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT