Published : 19 Nov 2013 12:00 AM
Last Updated : 19 Nov 2013 12:00 AM
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் திருவாரூரில் மனுநீதி சோழனுக்கும் பிரமாண்டமாக மணிமண்டபம் அமைக்கப்படு இருக்கிறது.
இதுபோல சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா, திண்டுக்கல்லில் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கும் மணி மண்டபங்கள் கட்டப் படுகின்றன. விடுதலைப் போராட்ட வீரர்கள், தன்னலமற்ற மக்கள் சேவை புரிந்தவர்கள், சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க பாடுபட்டவர்கள், மக்களின் உரிமைகளை மீட்க போராட்டங்களை நடத்தியவர் களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபங்கள், உருவச் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பென்னி குக், கரிகால் சோழன்
நூறு ஆண்டுகளைக் கடந்து உறுதியாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய இங்கிலாந்து நாட்டு பொறியாளர் பென்னிகுக் நினைவாக தேனி லோயர் கேம்ப்பில் ரூ.1.25 கோடி செலவில் அவரது வெண்
கல்ச் சிலையுடன்கூடிய மணிமண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜனவரி மாதம் திறந்துவைத்தார்.
இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக காட்சியளிக்கும் கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனுக்கு ரூ.2.10 கோடி செலவில் 4090 சதுரஅடி பரப்பளவில் மணி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு வைப்பதற்காக குதிரையில் கரிகால் சோழன் கம்பீரமாக உட்கார்ந்திருப்பது போன்ற வெண்கலச் சிலை தயாராகிவிட்டது.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரைக் கவுரவிக்கும் வகையில் அவருக்கு ரூ.60 லட்சம் செலவில் சிவகங்கையில் மணிமண்டபம் கட்டப்பட்டு வரு கிறது. இப்பணியை டிசம்பர் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மன்
அதுபோல திருவாரூரில் மனுநீதிச் சோழனுக்கும், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும், சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவுக்கும், திண்டுக்கல்லில் ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆகியோருக்கும் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபங்கள் கட்டப்பட உள்ளது. இந்த மணிமண்டபங்களின் மாதிரி வரைபடத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து விட்டார். இந்தப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT