Published : 24 Nov 2013 12:00 AM
Last Updated : 24 Nov 2013 12:00 AM
இந்தியா முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய மெகா லோக் அதாலத் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டும் ஒரே நாளில் சுமார் 9 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் பல லட்சம் வழக்குகள் தேங்கியுள்ள நிலையில், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் லோக் அதாலத் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாடு தழுவிய அளவில் அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை ஒரே நாளில் மெகா லோக் அதாலத் நடைபெற்றது.
புதுடெல்லியில் சனிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நாடு தழுவிய அளவிலான இந்த மெகா லோக் அதாலத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், வட்டார நீதிமன்றம் என அனைத்திலும் ஒரே நேரத்தில் தேசம் தழுவிய மெகா லோக் அதாலத் நடைபெறுவது இதுவே முதல் முறை. நாடு முழுவதும் சுமார் 39 லட்சம் வழக்குகளை இந்த மெகா லோக் அதாலத்தில் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
தலைமை நீதிபதியின் உரை இணையதளம் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் உள்பட நாட்டிலுள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களும் இந்த தொடக்க விழா நிகழ்ச்சியின் போது வீடியோ கான்ஃபரஸிங் மூலம் இணைக்கப்பட்டிருந்தன.
சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு இந்த தொடக்க விழா நிகழ்ச்சி தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வீடியோ கான்ஃபரஸிங் மூலம் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவர் நீதிபதி சதீஷ் கே. அக்னிஹோத்ரி உள்ளிட்ட நீதிபதிகள் பார்த்தனர்.
இந்த தொடக்க விழா நிகழ்ச்சிக்குப் பின் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் லோக் அதாலத் தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 14 அரங்குகளில் சுமார் 1,370 வழக்குகள் லோக் அதாலத் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தன.
இது தவிர, சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம், சிறு வழக்குகள் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்ற வழக்குகளை விசாரிப்பதற்காக உயர் நீதிமன்ற வளாகத்திலேயே தனியாக லோக் அதாலத் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம், எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன் என சென்னை மாநகரில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் லோக் அதாலத் நடைபெற்றது. இதேபோல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடைபெற்றது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் சுமார் 9 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT