Published : 02 Dec 2013 12:00 AM
Last Updated : 02 Dec 2013 12:00 AM
கட்சிக் கொடி ஏந்திய வாகனங்கள், சில அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சாலையில் செல்லும் போக்கு, தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
உச்சநீதிமன்ற சட்டப்படி, எந்த விதமான அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளின் வாகனங்களுக்கு, எந்த வகையான சைரன் விளக்கு பொருத்த வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்துள்ளது. மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் குறிப்பிட்ட வேகத்திலும், போக்குவரத்து விதிகளை மதித்தும் இயக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி.
ஆனால், பெரும்பாலான சைரன் மற்றும் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட வாகனங்கள், கட்சிக் கொடி கட்டிய வாகனங்கள், மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான வாகனங்கள் உள்ளிட்டவை மின்னல் வேகத்தில் அபாயகரமாக சாலைகளில் ஓடுவதால், பொதுமக்கள் அலறியடித்து வழிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த இருதினங்களுக்கு முன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேளம்பாக்கம் சென்று விட்டு, மயிலாப்பூரில் காங்கிரஸ் நிர்வாகி கோபண்ணா இல்லத் திருமண விழாவிற்கு வந்த போது, அவரது பாதுகாப்புக்கு பின்னால் வந்த பைலட் வாகனம் மோதி, இளம்பெண் காயமடைந்தார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த வழக்கில், காரை அதிவேகத்தில் ஓட்டிய போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
பொதுவாக சிவப்பு விளக்கு வாகனங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிக் கொடி கட்டிய வாகனங்களும் மின்னல் வேக பயணத்தில் முதலிடத்தில் உள்ளன. இதுகுறித்து போலீசாரின் சி.சி.டி.வி., கேமராக்களில் பல்வேறு படங்கள் பதிவாகியுள்ளன.
சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை கார்களில் கொடியைக் கட்டியும், சிலர் தாங்கள் பணி புரியும் துறைகளின் லோகோவை பொருத்தியும், போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமலும், பொதுமக்கள் மற்றும் மற்ற வாகன ஓட்டிகளை மிரட்டும் வகையிலும், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தி, சாலைகளில் மின்னல் வேகத்தில் செல்வதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். இதில் நடவடிக்கை எடுக்க முடியாமல், போலீசாரும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலையே உள்ளது.
சட்டமும், தண்டனையும் சாமானியருக்கு மட்டும் என்ற வகையில் தான், போக்குவரத்து விதிகளும், போலீஸ் நடவடிக்கையும் உள்ளதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான சடகோபன் கூறியதாவது: போக்குவரத்துச் சட்டப்படி, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மட்டுமே, அவசர சேவையை கருதி, சிக்னலை மீறிச் செல்ல முடியும். மற்ற யாராக இருந்தாலும் அவர்கள் விதியை பின்பற்ற வேண்டும். வி.ஐ.பி.,க்களாக இருந்தால், அவர்கள் போலீசுக்கு முன்னறிவிப்பு கொடுத்து, போக்குவரத்து போலீஸ்காரரின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுடன் தான், விரைந்து செல்ல முடியும்.
இதை பின்பற்றாதோர் போக்குவரத்து விதிகளை மீறியதாகத்தான் பொருள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT