Published : 04 Nov 2013 06:36 PM
Last Updated : 04 Nov 2013 06:36 PM

ஏற்காட்டில் தேர்தல் விதிமீறல்: அதிமுக மீது திமுக மீண்டும் புகார்

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக அமைச்சர் மற்றும் ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் சரோஜா உள்ளிட்டோர் மீது, திமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை இன்று நேரில் சந்தித்து, திமுக துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., திமுக தேர்தல் பார்வையாளர் பொன்.முத்துராமலிங்கம், வழக்கறிஞர் ஐ.பரந்தாமன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், கடந்த 31-ம் தேதி, தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஏற்காடு தொகுதி வேட்பாளர் சரோஜா, சேலம் எம்.பி. செம்மலை, முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், ஒரே நேரத்தில் சுமார் 40 கார்களில் அணிவகுத்துச் சென்றனர். இது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் ஆகும்.

இது தொடர்பாக, வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், வாழப்பாடி இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்யாமலும், ரசீது தராமலும் காலம் தாழ்த்தினர். இதையடுத்து, தேர்தல் துறைக்கு தகவல் அளித்ததும், போலீசார் ரசீது மட்டும் கொடுத்தனர். அதில், நிர்வாகிகள் பெயர் குறிப்பிடப்படவில்லை. இப்போது வரை வழக்குப்பதிவு செய்யவில்லை. உயர் அதிகாரிகளிடம் கேட்ட பின்னரே முடிவு செய்யப்படும் என தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்திலிருந்து மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், தேர்தல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், ஆளுங்கட்சியின் கட்டிப்பாட்டில்தான் செயல்படுகிறது என்பதும் தெளிவாக தெரிகிறது.

எனவே தேர்தல் ஆணையம் தலையிட்டு நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். விதியை மீறிய அதிமுக, நிர்வாகிகள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் துறை உத்தரவிட வேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக விதிமுறைகள் மீறியதாக, தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே புகார் ஒன்று அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x