Published : 17 Nov 2013 08:44 AM Last Updated : 17 Nov 2013 08:44 AM
தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கன மழை: மிதக்கிறது சென்னை
தமிழகத்தின் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் சென்னையின் அனைத்துப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மதியம் நாகப்பட்டினம் அருகே மணிக்கு 33 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம், புதுவையின் பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்க்கிறது.
சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, "காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு நாகப்பட்டினத்துக்குக் கிழக்கே 75 கி.மீ தூரத்தில் இருந்தது. இது மேலும் நகர்ந்து 11 மணிக்கு 30 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது. மதியம் 12.30க்கும் 1.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் நாகப்பட்டினத்துக்கு அருகே கரையைக் கடந்தது.
இது தற்போது நாகப்படினத்துக்கு மேற்கே 40 கி.மீ தூரத்தில் தரைப்பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகரும்" என்றார்.
வங்கக்கடலில் திங்கள்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறிப் பின்பு தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மதியமே கரையைக் கடந்தது.
இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குப் பல இடங்களில் மழை பெய்யும். வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழையும் மிகக் கன மழையும் பெய்யும். பலமான கடல் காற்று வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் பலமான கடல்காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
தென் தமிழகக் கடலோரப்பகுதிகளில் வடமேற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
நாகையில் மழை…
புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் சனிக்கிழமை அதி காலை 6 மணி முதல் பலத்த காற்று வீசத் துவங்கியது. 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் மாவட்டத்தின் பல பகுதி களில் மரங்கள் முறிந்து விழுந்தன, கூரைகள் பறந்தன.
சீர்காழி, பூம்புகார், தரங்கம்பாடி, காரைக்காலிலும் இதே நிலை காணப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 211 மி.மீ. மழை பதிவானது.
மாணவர் பலி...
நாகை மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மயிலாடுதுறை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
WRITE A COMMENT