Published : 02 Dec 2013 12:00 AM
Last Updated : 02 Dec 2013 12:00 AM
கருப்பு ஸ்டிக்கர், ஹெல்மெட் இவற்றைத் தொடர்ந்து சென்னை போலீசாரின் கவனம் இப்போது கார் சீட் பெல்ட் பக்கம் திரும்பியுள்ளது. வரும் 8-ம் தேதிக்குப் பிறகு, காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
அதிகரித்து வரும் விபத்துகள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்க தமிழக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குவது, கார் மற்றும் வேன்களில் உள்ளே இருப்பவர்களை மறைக்கும் கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஓரளவு வெற்றி கண்டிருக்கும் சென்னை மாநகர போலீஸ், தற்போது தனது பார்வையை கார்களில் சீட் பெல்ட் அணியாதவர்களின் பக்கம் திருப்பியுள்ளது.
டிசம்பர் 8 வரை கெடு
கடந்த இரண்டு வாரமாக சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
முதல்முறை சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதன் பிறகும் சீட்பெல்ட் அணியாத டிரைவர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.300 அபராதம் செலுத்த வேண்டும்.
டிசம்பர் 2-ம் தேதிக்கு பின்னர் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது கால அவகாசம் வருகிற 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
9-ம் தேதி முதல் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களை பிடிப்பதற்காக 50 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்று போக்குவரத்து காவல் இணை ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகன சட்டம்
மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 177-ல், கார்களை ஓட்டுபவர்களும், அதில் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும், பெரும்பாலான ஓட்டுனர்கள் அதைப் பின்பற்றுவதில்லை. போலீசாரும் கண்டுகொள்வதில்லை.
பல ஆண்டுகளாக நடை முறையில் இருந்து வரும் இந்தச் சட்டத்தை சென்னை போலீசார் இப்போது கையில் எடுத்திருப்பதற்கு காரணம் அதிகரித்து வரும் விபத்துகள்தான். கடந்த ஆண்டில் சென்னையில் மட்டும் சாலை விபத்துகளில் 1,401 பேர் உயிரிழந்துள்ளனர். இது விபத்துகளிலும் நாட்டின் தலைநகராக விளங்கும் டெல்லியை விட சற்றே குறைவு. அங்கு, 2012-ம் ஆண்டில் 1527 பேர் சாலை விபத்துக்களில் இறந்தனர். இதேகாலகட்டத்தில் நாடு முழுவதும் 1.39 லட்சம் பேர் விபத்துகளில் பலியாகியுள்ளனர்.
தாறுமாறான வேகம்
வாகனங்களின் தாறுமாறான வேகம்தான் விபத்துக்கு காரண மாகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சாலைகள் அகலப்படுத்தப்படுகிறது. ஆனால், அதை வாகன ஓட்டிகள் தங்களின் தாறுமாறான வேகத்துக்கு பயன்படுத்துகின்றனர். வேகம் அதிகரிக்கும்போது விபத்துகளும் அதிகரிக்கிறது. சாலை விதிகளை எல்லாரும் பின்பற்றினால் விபத்தில் இருந்து தப்பலாம். அதில் ஒன்று, காரில் சீட் பெல்ட் அணிவதாகும்.
பொதுவாகவே, கார்களில் சீட் பெல்ட் அணியும் வழக்கம் நம்மவர்களிடம் இருப்பதில்லை. தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப உடலை அசைக்க முடியாது என்று கருதி, பலர் சீட் பெல்ட் அணிவதை தவிர்க்கின்றனர். அதனால் தங்கள் பொன்னான வாழ்க்கையையே இழக்க நேரிடுகிறது.
சீட் பெல்ட்டால் என்ன நன்மை?
இடுப்புப் பகுதியைச் சுற்றி சீட்பெல்ட்டின் ஒரு பட்டையும், தோள்பட்டையில் இருந்து குறுக்காக உடலை அணைத்த படி மற்றொரு பட்டையும் காரில் இருக்கும். இது, உட்கார்ந்தி ருப்பவர்களை கார் இருக்கையுடன் இணைத்து வைத்திருக்கும்.
கார், விபத்தில் சிக்கும்போது ஸ்டியரிங்கில் ஓட்டுனரின் மார்புப் பகுதி இடிப்பதாலும் தூக்கி வீசப்படும்போது கார் கண்ணாடியில் தலை மோதுவதாலும்தான் பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்கின்றன. முன்சீட்டில் அமர்ந்திருப்பவர்களுக்கும் அப்படித்தான். ஆனால், சீட் பெல்ட் அணிந்திருந்தால் விபத்து ஏற்படும்போது உயிரிழப்பில் இருந்து தப்பிக்கலாம்.
‘‘பல விஷயங்களில் ஆரம்பத்தில் காட்டும் ஆர்வத்தை போலீசார் பின்னர் காட்டுவதில்லை. சில நாட்கள் நடவடிக்கை என்று பரபரப்பார்கள். அப்புறம் அந்த விஷயத்தை விட்டுவிட்டு வேறு விஷயத்துக்கு போய்விடுவார்கள். சீட் பெல்ட் விவகாரமும் அப்படி ஆகிவிடக் கூடாது’’ என்கிறார் வடசென்னை எக்ஸ்னோரா முன்னாள் தலைவரும், டாக்டரு மான அயனாவரம் கே.ராமதாஸ்.
சீட் பெல்ட் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘டெல்லி போன்ற நகரங்களில் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், சென்னையில் சீட் பெல்ட் அணிந்து ஓட்டுபவர்களைத்தான் விரல் விட்டு எண்ண முடியும். கடந்த ஆண்டில் பெங்களூரில் இந்தச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தி, 20 லட்சம் வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். இதனால், அங்கு விபத்து உயிரிழப்பு பெரிதும் குறைந்தது. சென்னையில் கடந்த ஆண்டில் காரில் சீட் பெல்ட் அணியாததால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 11 பேர் ஓட்டுனர்கள். இது சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும், இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் உயிரிழப்பே இல்லாமல் செய்துவிடலாம்’’ என்றார் நம்பிக்கையுடன்.
போலீசாரின் இந்த புதிய நடவடிக்கை, எப்படி செயல்படுத்தப்படும், எந்த அளவுக்கு பலன் தரும் என்பது போகப்போகத்தான் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT