Published : 05 Nov 2013 09:28 PM
Last Updated : 05 Nov 2013 09:28 PM
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், " பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று ஒரு பழமொழி உண்டு. அண்ணா தி.மு.க. அரசின் பாசிச முகத்திரை கிழிந்தது.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக, குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கடந்த காலத்தில் சர்வாதிகார பொடா அடக்குமுறையை ஏவிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்று ஒரு கபட நாடகத்தை நடத்தினார்.
அவரது சர்வாதிகார வெறிப்போக்கு மாறவே இல்லை. எந்தப் படிப்பினையையும் அவர் கற்றுக்கொள்ளவில்லை. எந்தக் காலத்திலும் வன்முறையில் துளியும் ஈடுபடாத திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீது காவல்துறையின் மூலம் பொய்வழக்குப் போட்டு சேலம் சிறையில் அடைக்கச் செய்தார்.
அவர் பிணையில் வரக்கூடாது என்பதற்காக தற்போது தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளார் என்பது அவரது காட்டாட்சி தர்பாரையே காட்டுகிறது. இந்த அடக்குமுறையை எதிர்கொண்டு ஜனநாயக கருத்துரிமையைக் காக்க வீறுகொண்டு போராடுவோம். அ.தி.மு.க. அரசின் அக்கிரமமான அடக்குமுறைக்கு எனது பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.
சேலம் காந்திரோட்டில் உள்ள வணிகவரி துறை அலுவலகத்தில் மர்ம நபர்கள் கோணிப் பையில் பெட்ரோல் நினைத்து எரியூட்டி வீசி சென்றனர். இந்த வழக்கில் அஸ்தம்பட்டி காவல் அதிகாரிகள், திராவிட விடுதலை கழகத் தலைவர் கொளத்துார் மணி உள்பட நான்கு பேரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்த நிலையில், கொளத்தூர் மணி மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT