Published : 30 Jun 2017 09:14 AM
Last Updated : 30 Jun 2017 09:14 AM
தமிழகத்தின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்காக டெல்லி யில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கலந்து கொண்டார்.
தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். புதிய டிஜிபியை தேர்வு செய்ய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் தலைமையில் சிறப்புக் கூட்டம் நேற்று மாலை டெல்லியில் நடைபெற்றது.
இதில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் சீனியாரிட்டி பட்டியலில் உள்ள முதல் 5 அதிகாரிகள் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் தமிழக அரசு கொடுத்துள்ளது. அதில், நேபாள எல்லை பாதுகாப்புப் படை டிஜிபியாக இருக்கும் அர்ச்சனா ராமசுந்தரம், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி கே.ராதாகிருஷ்ணன், சிறைத்துறை டிஜிபி எஸ்.ஜார்ஜ், மின்சார வாரிய விஜிலென்ஸ் டிஜிபி கே.பி.மகேந்திரன் மற்றும் தற்போது டிஜிபி பொறுப்பில் இருக்கும் டி.கே.ராஜேந்திரன் ஆகிய 5 பேரின் பெயர்கள் உள்ளன.
இதிலிருந்து, 3 பேரைத் தேர்வு செய்து தலைமைச் செயலாளர் கிரிஜாவிடம் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒருவரை புதிய டிஜிபியாக தமிழக அரசு நியமித்துக் கொள்ளலாம். புதிய டிஜிபிக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
தேர்வு செய்வது எப்படி?
உச்சநீதிமன்றத்தில் பிரகாஷ் சிங் என்ற ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒரு பொதுநல வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2006-ம் ஆண்டு ஒரு தீர்ப்பளித்தது. அதில், "ஒரு மாநிலத்தில் பணியாற்றும் மூத்த ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு மாநில அரசு அனுப்ப வேண்டும். அதில் 3 பேரை தேர்ந்தெடுத்து மாநில அரசுக்கு மத்திய அரசு அனுப்பும்.
அப்படி அனுப்பப்படும் மூன்று பேரில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து டிஜிபியாக மாநில அரசு நியமித்துக் கொள்ளலாம். டிஜிபியாக நியமிக்கப்படும் அதிகாரி, அடுத்த 2 ஆண்டுகளுக்கு தொடர்ந்து டிஜிபியாக இருப்பார். அவரது பணி ஓய்வு இடையில் வந்தாலும் கூட, அவர் 2 ஆண்டுகளுக்கு டிஜிபியாக தொடர்ந்து இருப்பார். அதன் பிறகே அவர் ஓய்வு பெறுவார்" என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வழக்கமாக கடிதம் மூலமாகவே, டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் கருத்து பெறப்படும். ஆனால் இம்முறை தமிழகத்தின் தலைமைச் செயலாளரையும், உள்துறை செயலாளரையும், மத்திய அரசு நேரில் வரவைத்துள்ளது. டிஜிபி அந்தஸ்தில் இருப்பவர்கள் குட்கா வியாபாரிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிப்பதற்காகவே தலைமைச் செயலாளர் நேரில் வரவழைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT