Published : 02 Dec 2013 06:03 PM
Last Updated : 02 Dec 2013 06:03 PM
மத்திய அரசின் மத வன்முறைத் தடுப்பு மசோதா 2013-க்குக் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமல், அம்மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பது ஜனநாயக விரோதம் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதிய கடிதத்தில், ' "திருத்தப்பட்ட மத வன்முறைத் தடுப்பு மசோதா 2013" என்ற பெயரில், உள்துறை அமைச்சகத்தால், ஒரு மசோதாவின் நகல் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா, ஏற்கெனவே கடந்த 2011-ம் ஆண்டில் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்ட மத மற்றும் திட்டமிட்ட வன்முறைத் தடுப்பு மசோதாவின் மறுநகல்.
எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், இந்த மசோதாவை அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடக செய்திகள் மூலம் அறிகிறேன். கடந்த 2011-ம் ஆண்டு வரைவு மசோதா அனுப்பப்பட்டபோதே, அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு உட்பிரிவுகளுக்கு எனது கடும் எதிர்ப்பை ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற 16-வது தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பேசப்பட்ட விவர அறிக்கையில், இந்த மசோதா தொடர்பாக ஏதும் இடம்பெறவில்லை. அதுபோன்ற எந்த ஒரு சட்டமசோதாவை கொண்டு வருவதற்கு, மீண்டும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததையும் நினைவுகூர்கிறேன்.
தற்போது, புதிய வரைவு மசோதா உள்துறை அமைச்சகத்தால் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சூழ்நிலையில், திருத்தப்பட்ட புதிய வன்முறைத் தடுப்பு மசோதாவில், ஏற்கெனவே நான் எதிர்ப்பு தெரிவித்திருந்த பல்வேறு பிரிவுகள், தொடர்ந்து இடம்பெற்றிருக்கிறது.
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் 5 மாத காலமே உள்ள நிலையில், இதுபோன்றதொரு அவசர கதியிலான வரைவு மசோதாவைக் கொண்டுவர அவசியம் என்ன?
அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய பின்னரே, வன்முறைத் தடுப்பு மசோதாவை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அதுவரை இதுபோன்றதொரு மசோதாவை அவசர கதியில் நிறைவேற்றக்கூடாது' என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT