Published : 30 Nov 2013 09:00 AM
Last Updated : 30 Nov 2013 09:00 AM

சென்னை: டிசம்பர் 20ம் தேதி சரக்குப் போக்குவரத்து வேலை நிறுத்தம்

சரக்குகளின் வாடகைக் கட்டணத்தை உயர்த்தக்கோரி டிசம்பர் 20ம் தேதி ஐந்து மாநிலங்களில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சென்னை சரக்குப் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை சரக்குப் போக்குவரத்துச் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் 'தி இந்து'விடம் கூறியதாவது:

டீசல் விலை உட்பட சரக்குப் போக்குவரத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஆனால் இந்த விலை உயர்வுக்கு ஏற்றாற்போல் அரசோ, தனியார் நிறுவனங்களோ வாடகையை உயர்த்தித் தருவதில்லை. இதன் காரணமாக லாரி உரிமையாளர்கள் நிதி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தவணையைக் கட்டமுடியாமல் போகிறது.

எங்களின் கஷ்டங்களைப் புரிந்துகொள்ளாமல், நிதி நிறுவனங்களும் லாரிகளை எடுத்துக் கொண்டு போய்விடுகின்றன. அதோடு அந்த லாரிகளை விற்றுவிட்டு மீதமுள்ள தவணையைக் கேட்டு நீதிமன்றத்தின் மூலம் எங்களுக்கு நோட்டீஸ் விடுகின்றன. இப்படி, தமிழ்நாடு, புதுவை, கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சுமார் 1,30,000 லாரிகள் நிதி நிறுவனங்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனால் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான சரக்குப் போக்குவரத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.எனவே, இந்தப் பிரச்னைகளில் இருந்து சரக்குப் போக்குவரத்தை மீட்க

சரக்கு லாரிகளைப் பயன் படுத்தும் அனைத்து அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் எங்களுக்கு 20 முதல் 22 சதவிகிதம் வரை வாடகையை உயர்த்தித் தர வேண்டும்.

இந்த கோரிக்கையை முன்வைத்து டிசம்பர் 20ம் தேதி தென்மாநிலங்கள் அனைத்திலும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நாடு முழுக்க வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என சரக்குப் போக்குவரத்துச் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x