Last Updated : 25 Nov, 2013 12:00 AM

 

Published : 25 Nov 2013 12:00 AM
Last Updated : 25 Nov 2013 12:00 AM

கோமாரி நோய்: நாள்தோறும் 2.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைகிறது

கோமாரி நோயால் ஆயிரக்கணக்கான கறவை மாடுகள் இறந்ததால் தினமும் பால் கொள்முதல் 2.5 லட்சம் லிட்டர் வரை குறைந்துள்ளது.

பால் கொள்முதல் குறைவு

தமிழ்நாட்டில் சமீபத்தில் திருவாரூர், நாகை, ஈரோடு உள்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கோமாரி நோய் தாக்கியதில் ஆயிரக்கணக்கான கறவை மாடுகள் இறந்துவிட்டன.

இந்த நோய் பாதித்த பல்லாயிரக்கணக்கான மாடுகள், கறக்கும் பால் அளவும் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் தினமும் 2.5 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் குறைந்துவிட்டது.

இலவச கறவை மாடுகள் வழங்குவது தற்காலிக நிறுத்தம்

கோமாரி நோயால் மாவட்டங்களில் நடைபெறும் கால்நடை சந்தைகளை மூடும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் கோமாரி நோய்த் தாக்குதல் இருப்பதால், தமிழக அரசின் இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கறவைப் பசுக்கள் வாங்கிக் கொடுப்பது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல், பொதுச் செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது:

1 லட்சம் கால்நடைகள் பலி

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) தினமும் 25 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்தது. மாடுகளை கோமாரி நோய் தாக்கிய பிறகு தினமும் 2.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது.

சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் தினமும் 4.75 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தது. இப்போது 4.35 லட்சம் லிட்டர் பால்தான் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதுபோல கோமாரி நோய்க்கு முன்னர், ஈரோட்டில் தினமும் 2.40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது 1.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் குறைந்துவிட்டது. பொதுவாக பால் கொள்முதல் குறையும்போது, கூடுதல் பாலை பால் பவுடராக மாற்றாமல், தட்டுப்பாட்டை சமாளிக்க அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்போதும் அதைத்தான் செய்கிறார்கள்.

கோமாரியை ஒழிக்க வேண்டும்

25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கோமாரி நோய் கடுமையாகத் தாக்கியுள்ளது. 20 ஆயிரம் மாடுகள் உள்பட ஆடுகள், பன்றிகள் எல்லாம் சேர்த்து 1 லட்சம் கால்நடைகள் இறந்துள்ளன. போலியோ மற்றும் பெரியம்மை நோயை ஒழித்ததுபோல, மாடுகளைத் தாக்கும் கோமாரி நோயையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பால் கொள்முதலில் பாதிப்பில்லை

தமிழகத்தில் 50 லட்சம் கறவை மாடுகள் உள்ளன. தினமும் 1 கோடியே 87 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனம் தினமும் 26 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. தனியார் நிறுவனங்கள் 50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கின்றன. உள்ளூர் கடைகள், சொந்த உபயோகத்துக்கு கணிசமாக பால் பயன்படுத்தப்படுகிறது.

கோமாரி நோயால் சுமார் 5 ஆயிரம் மாடுகள் இறந்துவிட்டன. அதனால், ஆவின் நிறுவன பால் கொள்முதல் தற்போது 24.5 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. கோமாரி நோயால் பால் கொள்முதல் பெருமளவு குறையவில்லை. எனவே, தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x