Published : 11 Oct 2013 04:48 PM
Last Updated : 11 Oct 2013 04:48 PM

3 ஆண்டுக்கு முன்பு கடத்தப்பட்ட குழந்தை ராஜஸ்தானில் மீட்பு

3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை ராஜஸ்தானில் மீட்கப்பட்டது.

சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் 13-வது தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுன்லால். இவரது மனைவி ஹேமலதா. அர்ஜுன்லால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். அப்போது அவருடன் சென்ற 2 வயது மகள் சாந்தினியை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர். இதுபற்றி ஹேமலதா எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. தனது குழந்தையை கண்டுபிடித்துத் தர காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேமலதா மனு தாக்கல் செய்தார்.

குழந்தையின் பெயரில் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதால் உறவினர்கள் யாராவது குழந்தையை கடத்தி இருக்கலாம் என்றும் மனுவில் கூறி இருந்தார். இதையடுத்து குழந்தையை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி எம்.கே.பி.நகர் காவல் நிலையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. குழந்தையை கண்டுபிடிக்க உதவி ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடத்தப்பட்ட குழந்தை சாந்தினி ராஜஸ்தானில் இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். அங்கு 8 நாட்களாக தேடி அலைந்து விசாரணை நடத்தியதில் குழந்தை ராஜஸ்தான் மாநிலம் பில்டா என்ற பகுதியில் இருப்பது தெரியவந்தது.

குழந்தையை மீட்க தனிப்படையினர் சென்றபோது அவர்களை கடத்தல்காரர்கள் தாக்கினர். இதையடுத்து ராஜஸ்தான் காவல் துறையின் உதவியுடன் குழந்தை சாந்தினியை மீட்டனர். விசாரணையில் அர்ஜுன்லாலின் அண்ணன் லாதுராம் டெபாசிட் பணம் ரூ.20 லட்சத்துக்காக குழந்தையை கடத்தி உறவினர் வீட்டில் சிறை வைத்திருந்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட குழந்தையை காவல் துறையினர் சென்னை கொண்டு வந்து தாயிடம் ஒப்படைத்தனர்.

குழந்தையை கடத்திய லாதுராம் கர்நாடகத்தில் தலைமறைவாக உள்ளார். அவரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x