Published : 28 Jun 2017 12:18 PM
Last Updated : 28 Jun 2017 12:18 PM
பான் மசாலா, குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக புகாரில் சிக்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் விவகாரத்தில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இன்று சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் முன்வைத்த கோரிக்கை மீது பேசுவதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி வழங்க மறுத்தார்.
இதனைக் கண்டித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து தங்கள் கண்டத்தைப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து, சட்டப்பேரவை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கடந்தாண்டு ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று, தடைசெய்யப்பட்டு இருக்கக்கூடிய குட்கா உள்ளிட்ட போதைப் பவுடர் விற்பனை செய்த மாதவராவ் என்பவரின் வீட்டில், அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அந்தச் சோதனையில் சில டைரிகளும், கணக்குப் புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. அவற்றில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக, யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என விரிவாக பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
அந்தப் பட்டியலில் முதலிடத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கருடைய பெயர் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல, இன்றைக்கு காவல்துறையில் உயரதிகாரிகளாக இருக்கின்ற, ஏற்கெனவே சென்னை மாநகரத்தின் கமிஷனராக இருந்த ஜார்ஜ், இப்போது டி.ஜி.பி., ஆக இருக்கக்கூடிய ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்களும் அவற்றில் இடம்பெற்றுள்ளன.
இவர்களுக்கு ஒட்டுமொத்தமாக 40 கோடி ரூபாய் லஞ்சப்பணமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் அந்த டைரியில் தெளிவாக உள்ளன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வருமான வரித்துறை அதிகாரிகள், அன்றைக்கு தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகனராவுக்கு கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அந்தக் கடிதத்தை வருமான வரித்துறையின் முதன்மை இயக்குநர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் 11-08-2016 அன்று அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தை அவர் அனுப்பி வைத்து 10 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், அதன் மீது இதுவரையிலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தலைமைச் செயலாளரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த இடைப்பட்ட நேரத்தில், நேற்று காலையில் தி இந்து பத்திரிகையில், முதல் பக்கத்தில், தலைப்புச் செய்தியாக இது வெளியாகி இருக்கிறது. குட்கா விவகாரத்தில் லஞ்சப்பணம் அமைச்சருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது, அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருமானவரித்துறை தாக்கீது அனுப்பி இருக்கிறது, ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தி இந்து பத்திரிகையில் தெளிவாக செய்தி வந்திருக்கிறது. ஆனால், அந்த செய்தியில் அமைச்சரின் பெயரும், போலீஸ் அதிகாரிகளின் பெயர்களும் போடப்பட்டு இருக்கவில்லை.
ஆனால், நேற்று மாலையில் இருந்து இரவு வரை, 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சியில் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் பெயர்கள் எல்லாம் தெளிவாக, தொடர்ந்து வெளியிடப்பட்டன. அதில் உங்கள் உடல் நலன் தமிழ்நாட்டில் விற்கப்படுகிறது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வருமான வரித்துறை முன்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இதே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனையிட்டபோது, 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களை கைப்பற்றி இருக்கிறார்கள். அதில் முதலிடத்தில் இருப்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர். அதன் பிறகு, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி என வரிசையாக 9 அமைச்சர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேர்தல் கமிஷன், இன்றைக்கு தலைமைச் செயலாளருக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அந்த செய்தியும் 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சியில் வந்தது. ஆனால், இதுகுறித்து சட்டமன்றத்தில் நாங்கள் பேச முயன்றபோது, அதற்கு அனுமதி தரவில்லை. எங்களை பேசவிடவில்லை. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
ஆனால் குட்கா விவகாரத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் தேதி நடந்த சம்பவத்தில், 11.08.2016 அன்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 10 மாதங்களுக்கு முன்பு, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கீடு அனுப்பியிருக்கிறார்கள். அதன் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருமான வரித்துறை கைப்பற்றிய டைரிகள், கணக்குப் புத்தகங்களில் மாமூல் கொடுத்த அனைத்து விவரங்களும் இடம்பெற்று உள்ளன.
அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் முதல்வராக இருந்த நேரத்தில், டிசம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்திற்கே வந்து, தலைமைச் செயலாளர் அலுவலகத்திலேயே வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. அப்போது, அங்கிருந்த ஆவணங்களை சீனியர் அதிகாரிகள் பறிமுதல் செய்ததும், இந்த குட்கா குறித்த விவரங்களும் அதில் அடங்கியிருக்குமோ என்று பயந்து, மாநகர போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ், குட்கா மாமூல் விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அவரும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதாவது, குற்றவாளியாக இடம்பெற்றுள்ள ஜார்ஜ், அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஒரு நாடகத்தை நடத்தி, அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன ராவுக்கு, குட்கா விற்பனையில் மாமூல் வாங்கியது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால், அதன் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கிடையில் தான், நேற்று 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அதிலும் குறிப்பாக கிடைத்துள்ள டைரி உள்ளிட்ட ஆவணங்களின்படி எந்தெந்த நிலையில் லஞ்சம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று பார்த்தால், தீபாவளி மாமூல் 15 லட்சம் ரூபாயை போலீஸ் கமிஷனருக்குக் கொடுத்து இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் மாமூலாக 15 லட்ச ரூபாயை கொடுத்திருக்கிறார்கள்.
2016 டிசம்பரில் மட்டும் 1.14 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அந்த டைரியில் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் போலீஸ் கமிஷனராக இருந்தது ஜார்ஜ். அதேபோல, டி.ஜி.பி., ஆக இருந்தது டி.கே.ராஜேந்திரன், என்று அந்த டைரியில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆகவே, 11.08.2016 தேதியிட்ட வருமானவரித்துறையின் கடிதம் மற்றும் கைப்பற்றப்பட்ட டைரியில் உள்ள 40 கோடி ரூபாய் பெற்ற அமைச்சர் பெயரை பேரவையில் வெளியிட வேண்டும், அதுமட்டுமல்ல, போலீஸ் கமிஷனர் மற்றும் டி.ஜி.பி., ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சட்டமன்றத்தில் எழுப்புவதற்கு நேரமில்லா நேரத்தினைப் பயன்படுத்தி முயன்றோம்.
ஏற்கெனவே சபாநாயகருக்கு ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறோம், கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறோம். அந்த அடிப்படையில் எழுந்து கேள்வி கேட்டோம், ஆனால், அவையில் பேச எங்களை அனுமதிக்கவில்லை.
மக்கள் நல்வாழ்வுத்துறை என்பது உயிர்களைக் காப்பாற்றும் ஒரு துறை. ஆனால், அந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் இன்றைக்கு உயிர்களை எடுக்கும் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். நியாயமாகப் பார்த்தால் அவர் ஒரு கொலை முயற்சிக் குற்றவாளியாக (Attempt Murder) இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் இன்றைக்கு வெளியில் வந்திருக்கின்றன.
குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்க லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதியளித்து, ஒரு கொலை முயற்சி குற்றவாளியாக இருக்கக்கூடிய அந்த அமைச்சரை பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் செய்ய வேண்டும். ஆனால், அதை அவர் செய்ய மாட்டார். காரணம் என்னவென்றால், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்த குற்றத்தில், முதல்குற்றவாளியாக உள்ள எடப்பாடி பழனிசாமி இதை செய்ய மாட்டார்.
இதையெல்லாம் நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்கு நாங்கள் முயற்சித்த நேரத்தில், அனுமதி தர மறுத்ததை கண்டிக்கின்ற வகையில், சட்டமன்றத்தில் இருந்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
சட்டசபையில் இதுகுறித்து நாங்கள் பேசினால், அதற்கு மறுப்பு சொல்லவும், விளக்கம் சொல்லவும் அமைச்சர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நாங்கள் இவற்றை எல்லாம் பேசினால், அதை இல்லை என்று அவர்களால் மறுத்துப் பேச முடியாது என்பதால், அந்த அச்சத்தினால் தான் எங்களை அவையில் பேச அனுமதி மறுக்கிறார்கள் என்பது தான் உண்மை.
சட்டம் – ஒழுங்குக்கு தலைமையேற்று உள்ள காவல்துறை டி.ஜி.பி., ராஜேந்திரன் பெயரே இதில் இடம்பெற்று இருக்கிறது. இதனை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது. அவையில் நாங்கள் ஆதாரங்களோடு பேசுவதை அவர்களால் மறுக்க முடியாது என்பதால், மக்கள் கடுமையாக பாதிக்கக்கூடிய இவ்வளவு பெரிய பிரச்சினை குறித்து எங்களை பேசவே அனுமதி மறுக்கிறார்கள். இதுகுறித்து ஆளுநரிடம் உரிய நேரத்தில் புகார் அளிப்போம்'' என்று ஸ்டாலின் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT