Published : 21 Dec 2013 10:46 AM
Last Updated : 21 Dec 2013 10:46 AM

சிவகாசி: தீ விபத்தால் விடிய விடிய வெடித்த பட்டாசுகள்; 20 கட்டிடங்கள் தரைமட்டம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வியாழக்கிழமை இரவு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆலையில் இருந்த பட்டாசுகள் வெள்ளிக்கிழமை அதி காலை வரை வெடித்துச் சிதறின.

சிவகாசி அருகேயுள்ள அனுப்பங்குளத்தில் விஜய் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரிலான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வியாழக்கிழமை மாலை, அனைவரும் பணி முடிந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர்.

20 கட்டிடங்கள் தரைமட்டம்

இரவில் ஆலையில் வெடி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த அறையில் எதிர்பாராதவிதமாக வெடி மருந்துகள் வெடித்துச் சிதறின. இதில், வெடிமருந்துகள் மற்றும் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த 13 கட்டிடங்கள் இடிந்து தரைமட்ட மாயின. வெடிமருந்துகள் சிதறி விழுந்து வெடித்ததில் தொழிற்சாலைக்குள் அடுத்தடுத்து இருந்த 7 கட்டிடங்களும் இடிந்து சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொழிற்சாலையின் பல இடங்களி லும் தீ பரவியது.

பேன்ஸி ரகப் பட்டாசுகள் வெடித்துத் சிதறியதால், அனைவரும் சுமார் ஒரு கி.மீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்பட்டனர். வியாழக்கிழமை இரவு தொடங்கி, வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக்கொண்டே இருந்தன. இதனால், தொழிற்சாலைக்குள் செல்ல அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அச்ச மடைந்தனர். கோட்ட தீயணைப்பு அலுவலர் மனோகரன் தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள் வெள்ளிக்கிழமை காலை வரை போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. பட்டாசுத் தொழிற்சாலையில் பணி முடிந்து பணியாளர்கள் அனைவரும் வீடு திரும்பியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், வெடி பொருள்களை கவனமாகக் கையாளாத மற்றும் கவனக்குறைவாக இருந்ததாக பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியைச் சேர்ந்த எஸ். செல்வம் (51) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இடிந்து தரைமட்டமான பட்டாசு ஆலை அறையில் தீ பரவாமல் அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x