Published : 30 Jun 2017 11:51 AM
Last Updated : 30 Jun 2017 11:51 AM
ஜிஎஸ்டி வரி விதிப்பில் பனியன் ஆடை உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கும் நூல், துணிக்கு 5 சதவீதமும், அதை தைப்பதற்கு 18 சதவீதமும் நிர்ணயம் செய்திருப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தையல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கானோர் நேற்று அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது” பின்னலாடை உற்பத்தியில், நூலில் இருந்து ஆடை பார்சல் செய்யப்படுவது வரை 10-க்கும் மேற்பட்ட ‘ஜாப் ஒர்க்’ எனப்படும் துணைத் தொழில்கள் நடைபெறுகின்றன. இதில், உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பனியன், ஜட்டி உள்ளிட்ட உள்ளாடைகளை தயாரிப்பதில், பெரிய நிறுவனங்கள் மொத்தமாக துணிகளை வாங்கி பனியன், ஜட்டி வடிவமைப்பில் வெட்டி, தையல் நிலையங்களுக்குக் கொடுத்து, கூலிக்கு தைத்து வாங்குகின்றனர்.
தற்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பில் தைத்துக் கொடுப்பதற்கு 18 சதவீதம் விதிக்கப்பட்டிருப்பதால், இத்தொழிலில் ஈடுபட்டிருப்போர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
‘பவர் டேபிள்’ என்று சொல்லப்படும் தையல் தொழில், வீட்டுத் தொழிலாக நடைபெறுகிறது. குறிப்பாக, குடும்பத்தில் உள்ள அனைவரும் உழைத்து வருமானம் பெறும் நிலை உள்ளது.
தானும் ஒரு தொழிலாளியாக வேலை செய்துகொண்டு, அதிகபட்சம் ரூ.3 லட்சம் முதலீட்டில் 4 முதல் 5 தையல் இயந்திரங்களை வைத்து, 10 முதல் 15 பேரை சேர்த்து ‘ஜாப் ஒர்க்’ செய்கின்றனர். இதற்கு, பெரிய நிறுவனங்கள் தையல் கூலியை கணக்கிட்டு வழங்குவர். அதுவும் தைத்துக் கொடுத்து, 3 மாதம் கழித்தே கூலியைத் தரும் நிலையும் உள்ளது.
100 பனியன் தைத்து கொடுத்தால் ரூ.600 கூலி கிடைக்கும். இதில்தான் தையல் நூல், மின்சாரம், கூலி, போக்குவரத்து, வாடகை என அனைத்தையும் ஈடுகட்ட வேண்டும். இதற்கு 18 சதவீதம் வரி என்பது ரூ.108. ரூ.600 கூலி பெறுவதற்கு, ரூ.108 என்றால், தொழிலை கைவிடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றனர்.
பவர்டேபிள் சங்க உதவிச் செயலாளர் முருகேசன் கூறும்போது, “திருப்பூர் பவர்டேபிள் சங்கம் சார்பில் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்தோம். அதன்படி, வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
திருப்பூரைச் சுற்றி 40 கி.மீ. சுற்றளவில் 2000-க்கும் மேற்பட்ட பவர் டேபிள் சிறு நிறுவனங்களில், 2 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ. 5 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் பவர்டேபிள் சேர்க்கப்பட்டால், அதற்கென தனியாக கம்ப்யூட்டர் வாங்கி, கணக்கரை நியமித்து பில்லிங் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதற்கு, ஒருவரை தனியாக வேலைக்கு அமர்த்த வேண்டும்.
எனவே, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு, 18 சதவீத ஜிஎஸ்டி வரியை, மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT