Published : 29 Nov 2013 03:04 PM
Last Updated : 29 Nov 2013 03:04 PM

திசைத் திருப்புகிறார் ஜெயலலிதா: கருணாநிதி சாடல்

மின் தட்டுப்பாடு பிரச்சினையில், மக்களின் வெறுப்புக்கு ஆளானதால், மத்திய அரசு மற்றும் திமுக மீது குற்றம் சுமத்தி, திசைத் திருப்பித் தப்பித்துக்கொள்வதாக, முதல்வர் ஜெயலலிதாவை திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்குக் காரணம் 'தமிழகத்தை இருளில் தள்ள டெல்லி சதி' என்று ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதோடு, முந்தைய தி.மு.க. அரசின் தொலை நோக்கின்மை, செயலின்மை என்றெல்லாம் உங்களையும் குறை கூறியிருக்கிறாரே?

கடந்த 25–10–2013 அன்று சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு குறித்து, அந்தத் துறையின் அமைச்சருடைய கவனத்தை ஈர்த்து; கொண்டுவந்த தீர்மானத்திற்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா நீண்ட விளக்கமளித்தார்.

அதற்கு மறுநாளே, தி.மு.க. ஆட்சியில் என்னென்ன மின் திட்டங்கள் தொடங்கப்பட்டன, அவற்றின் நிலை என்ன, எந்த அளவிற்கு தொலைநோக்கோடு, நிர்வாகத் திறமையோடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பதையெல்லாம் சுமார் 2 பக்கங்களுக்கு விரிவாக எழுதியிருந்தேன். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தப்பதிலும் இல்லை.

மத்திய அரசுக்கு, மாநில அரசின் சார்பில் முதல்வர் கடிதம் எழுதுவதைப் பற்றி நமக்கொன்றும் இல்லை. ஆனால் தேவையில்லாமல், கடந்த அக்டோபரில் பேரவையில் விளக்கம் அளித்த போது தி.மு. கழக ஆட்சியின் மீது சாட்டிய குற்றச்சாட்டையே, திரும்பவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும், "முந்தைய தி.மு.க. அரசின் தொலைநோக்கின்மை மற்றும் செயலின்மை காரணமாக மின்சார தேவைக்கும், அளிப்புக்கும் இடையே 4,000 மெகாவாட் பற்றாக்குறை காணப்பட்டது" என்று எழுதியிருக்கிறார்.

அக்டோபரில் முதல்வர் இதே குற்றச்சாட்டினைப் பேரவையிலேயே கூறி, அதற்கு மறுநாளே நான் விரிவாகப் பதிலளித்த பிறகும், மீண்டும் அதே குற்றச்சாட்டினை பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் எழுதியிருக்கிறார் என்றால், அதற்கு என்ன பெயர் என்று சொல்வது?

அ.தி.மு.க. அரசின் அலட்சியப் போக்காலும், அக்கறையின்மையாலும் ஏற்படும் பிரச்சினைகள் முற்றி நெருக்கடி ஏற்பட்டு, பொதுமக்களின் வெறுப்புக்கு ஆளாகும் போதெல்லாம், திசை திருப்பித் தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தோடு, ஜெயலலிதா மத்திய அரசின் மீதோ அல்லது தி.மு.கழக ஆட்சியின் மீதோ குற்றம் சுமத்துவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x