Published : 11 Dec 2013 10:30 AM
Last Updated : 11 Dec 2013 10:30 AM
நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற கிராம உதவியாளர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
ப.வேலூர் அருகே பழைய வெங்கரையம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் மராமத்துப் பணிக்காக 60 லோடு மணல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த மணலை உரிய அனுமதியின்றி, முறைகேடான முறையில் அள்ளி வந்ததாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, இந்த மணலைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்ட பரமத்தி வட்டாட்சியர், மணலை யாரும் கடத்தாமல் இருப்பதற்காக, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்படி வெங்கரை கிராம நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இதன்படி, கடந்த இரு மாதங்களுக்கு மேலாக, கிராம நிர்வாக அலுவலர் உத்தரவுப்படி, அதே கிராமத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் கேசவன் (55) என்பவர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். வழக்கம்போல் திங்கள்கிழமை இரவும் கோயில் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் கேசவன். செவ்வாய்க்கிழமை காலை பார்த்தபோது, அவரை யாரோ கழுத்தை அறுத்துக் கொலை செய்திருந்தது தெரியவந்தது. மேலும், அவரது தலையிலும் காயம் இருந்தது.
பரமத்தி காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சுஜாதா, ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோயில் வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள மணலைத் திருட முயற்சித்தவர்களைத் தடுத்தபோது, கேசவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT