பத்தே மாதங்கள் ஆட்சி புரிந்து, வீரத்திற்கும், நட்புக்கும் இலக்கணமாக திகழ்ந்து வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்குவுக்கு இன்று நினைவு நாள். அவருக்கு விழுப்புரத்தில் சிலை அமைக்க வேண்டும் என்பது மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
சொருப் சிங் என்ற ரஜபுத்திர வீரன், முகலாய பேரரசின் படை தளபதிகளில் ஒருவர். இந்தியாவின் தென்பகுதிவரை தங்களின் ஆட்சியை விரிவுபடுத்திய காலகட்டத்தில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சொருப்சிங்கை கிபி 17 ஆம் நூற்றாண்டில் செஞ்சியை ஆட்சிபுரிய தேர்வு செய்யப்பட்டார்.
இவரின் மகன் தேஜஸ்சிங் (பிற்காலத்தில் தேசிங்கு என அழைக்கப்பட்டார்). இவரது நண்பர் முகமதுகான். டெல்லி சென்ற சொருப்சிங் அங்கிருந்த நீலவேணி என்றக்குதிரையை அடக்க முடியாததால் சிறை வைக்கப்பட்டார். இதை அறிந்த தேசிங்கு டெல்லி சென்று அக்குதிரையை தனது 15 வயதில் அடக்கினார். இதை கண்டு வியந்த டெல்லி அரசர் தனது சேனைத்தலைவர் பீம்சிங்கின் மகள் ராணிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்து, சொருப் சிங்கை விடுவித்து, அடக்கப்பட்ட நீலவேணி குதிரையை பரிசாக அளித்தார்.
சொருப்சிங் இறக்கும்போது டெல்லி அரசுக்கு செலுத்த வேண்டிய 70 லட்ச ரூபாய் வரியை செலுத்தாததால் தேசிங்கு முடிசூட்டிக்கொள்வதை ஆற்காடு நவாப் எதிர்த்தார். தனது பரம்பரை உரிமையை விட்டுக்கொடுக்காத தேசிங்கு 1717ம் ஆண்டு ஜனவரியில் தனக்கு தானே முடிசூட்டிக்கொண்டார். இதனால் ஆற்காடு நவாப் சதயத் உல்லாகானுக்கும், ராஜா தேசிங்குவுக்கும் பகை மூண்டது.
கப்பத்தொகையை கேட்ட நவாப்பிடம் கப்பம் செலுத்த முடியாது என கூறியதால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.முகமது கான் தனது திருமணத்திற்காக வழுதாவூர் சென்றிருந்த நேரத்தில் போர் தொடுத்தால் தேசிங்கு அடிபணிய வாய்ப்புண்டு என கணக்கு போட்ட நவாப் போரை அறிவித்து செஞ்சி கோட்டையை முற்றுகையிட்டார்.
இதை அறிந்த முகமதுகான் தனது திருமணத்தை நிறுத்திவிட்டு, தேசிங்குவின் படை தளபதியாக போரிட்டு வென்று தனது படையுடன் திரும்பும்போது, மறைந்திருந்த ஒருவனால் குறுவாளால் குத்தி கொல்லப்பட்டார். இதை அறிந்த ராஜா தேசிங்கு தானே போர்க்களத்திற்கு வந்தார். அப்போது பீரங்கி குண்டுகள் பொழிய, நடந்த போரில் நீலவேணிக்குதிரை கால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டது.
தன்னை எப்படியும் கொன்றுவிடுவார்கள், முதுகில் குண்டு பாய்ந்து இறந்தால் புறமுதுகுகாட்டி ஓடிய மன்னன் என வரலாறு சொல்லும் என கருதிய ராஜா தேசிங்கு, தன் வாளை வானத்தில் எறிந்து மார்பைக்காட்டி வீரமரணம் அடைந்தார். அந்த நாள்தான் 3.10.1714. இறக்கும் போது ராஜா தேசிங்குவிற்கு வயது 18. இதை அறிந்த ராணிபாய் உடன்கட்டை ஏறினார்.
வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்குவின் உடலை அப்படியே விட்டுவிட்டு செல்லாத ஆற்காடு நவாப் சதயத் உல்லாகான் செஞ்சிக்கு கொண்டு வந்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தின் அடையாளமாகிப்போன ராஜா தேசிங்குவுக்கு செஞ்சியில் சிலை வைக்க வேண்டும் என்பது பல்வேறு அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கை. ஆண்டுகள் பல கடந்தும் அரசு செவி சாய்க்கவில்லை. இந்தாண்டு இந்நாளில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் விழுப்புரம் மாவட்ட மக்கள் உள்ளனர்.
WRITE A COMMENT