Published : 07 Oct 2013 10:16 AM
Last Updated : 07 Oct 2013 10:16 AM

பா.ம.க. வியூகம் - தலைவர்கள் கருத்து

அனைத்து சமுதாயப் பேரியக்கம் என்ற பெயரில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு சாதி அமைப்புகள் ஒன்று சேர்ந்து சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தின. அனைத்து சாதி அமைப்புகளின் துணையோடு தேர்தலை பா.ம.க. சந்திக்க திட்டமிடுவதாக பேச்சு எழுந்துள்ளது.



இதுகுறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள்:

டி.கே.எஸ். இளங்கோவன், தி.மு.க. அமைப்புச் செயலாளர்:

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே சாதிகளின் பெயரால் அரசியல் அதிகாரம் பெற முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டதில்லை. தமிழக மக்களைப் பொருத்தவரை அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும்தான் தேர்தல்களில் முடிவெடுப்பார்களே தவிர சாதிய ரீதியாக இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை. ஆகவே, தமிழ்நாட்டில் சாதி அமைப்புகள் ஒன்று சேர்ந்து தேர்தலைச் சந்தித்தால் அத்தகைய அணியை மக்கள் நிராகரித்து விடுவார்கள்.

ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்:

கடந்த ஆண்டிலிருந்தே தலித் மக்களுக்கு எதிராக சாதி வெறி யூட்டும் வகையில் பா.ம.க.வினர் செயல்பட்டு வருகின்றனர். சாதி ரீதியில் மக்களைத் திரட்டும் முயற்சியில் பா.ம.க. ஈடுபட்டு வருவதாக நாங்கள் கூறி வந்தது இப்போது அம்பலமாகியுள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. எல்லா சாதிகளிலும் உள்ள ஏழைகள், உழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டுமே தவிர, சாதிகளாகப் பிரிந்து போராடினால் எவ்வித நன்மையும் கிடைக்காது. சாதிகளாக ஒன்றுசேர்ந்து சிலர் தேர்தலைச் சந்தித்தாலும் கூட அவர்கள் எவ்வித வெற்றியும் பெறப் போவதில்லை.

ஆர்.நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்:

மக்களின் அமைதியான, வளமான வாழ்வுக்கு வழி காணுவதே அரசியல் கட்சிகளின் பிரதான கடமை. இதற்கு மாறாக மக்களிடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் குலைக்கும் வகையில் சாதிய சக்திகள் தேர்தலில் ஒன்றுசேர்வது ஆரோக்கியமானது அல்ல. அதிலும், தலித் அமைப்புகளை ஒதுக்கி விட்டு பிற சாதிகள் ஓர் அமைப்பாக சேர்வது என்பதே ஒரு தீண்டாமை. இது நமது நாட்டின் குடியரசு முறைகளுக்கே விரோதமானது. நாட்டில் அமைதியையும், வளர்ச்சிப் போக்கையும் விரும்பும் பெரும்பான்மையான மக்கள் இத்தகைய சாதிய சக்திகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஜி.கே.மணி, பா.ம.க. தலைவர்:

தமிழ்நாட்டில் இதுவரை அதிகாரத்தில் இருந்த கட்சிகளின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த சாதி அமைப்புகளின் தலைவர்கள் பா.ம.க. தலைமையில் ஒரு புதிய அமைப்பு உருவாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இது அவர்களின் விருப்பமும், எதிர்பார்ப்பும் ஆகும். எனினும், இது குறித்து பா.ம.க. இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை.

இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x