Published : 28 Jun 2017 05:47 PM
Last Updated : 28 Jun 2017 05:47 PM

பட்டாசு, தீப்பெட்டி தொழில்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

பட்டாசு, தீப்பெட்டி தொழில்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பட்டாசு தயாரிப்புக்கு ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை 5-12 சதவிகிதமாக இருந்தது பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருப்பதானது, தொழிலையும், சிறு முதலீட்டாளர்களையும், தொழிலாளர்களையும் கடுமையாக பாதிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவலை தெரிவிக்கிறது.

பட்டாசு தயாரிப்பு பல பிரிவுகளாக குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது. அட்டை, குச்சி, பேப்பர், மருந்து, திரி, லேபிள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் தயாரிக்கப்பட்டு, மொத்தமாக ஒருங்கிணைத்து பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டாசு தொழிலை நம்பி லட்சகணக்கானோர் வாழ்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 800க்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன.

தீப்பெட்டி தொழிலுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இரு தொழில்களும் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. புதிய தொழிற்சாலைகளும், வேலை வாய்ப்புகளும் உருவாகாத சூழலில், இருக்கும் வேலை வாய்ப்புகளும் பறிக்கப்படுவதற்கான பொருளாதார பாதையைப் பின்பற்றும் மத்திய அரசின் இப்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பட்டாசு ஆலைகளில் வரும் 30-ம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, பட்டாசு, தீப்பெட்டி தொழில்களுக்கான வரியைக் குறைக்க வேண்டும், தமிழக அரசு இதில் தலையிட்டு வரியைக் குறைத்து பட்டாசு, தீப்பெட்டி தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் ஜி.எஸ்.டி. சட்டத்தினை அமலாக்கிடும் மத்திய அரசு ஏற்கெனவே வரிவிலக்கு பட்டியலில் இருந்த 509 பொருட்களை வரிவிதிப்பு பட்டியலில் கொண்டு வந்துள்ளது. முன்னைப்போலவே வரிவிலக்கு இப்பொருட்களுக்கு அளிக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x