Published : 20 Jun 2017 11:44 AM
Last Updated : 20 Jun 2017 11:44 AM

கதிராமங்கலத்தில் குவிக்கப்பட்டுள்ள காவல் படையைத் திரும்பப்பெறுக: வேல்முருகன் வலியுறுத்தல்

கதிராமங்கலத்தில் குவித்திருக்கும் காவல் படையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; அங்கு நடைபெறுவது "மீத்தேன் போன்ற பேரழிவுத் திட்டப்பணியோ" என்கிற மக்களின் ஐயத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஒஎன்ஜிசி என்பது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். அதன் பெயரிலேயே உள்ளபடி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவளி எடுக்க 2000ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தது. அதிலிருந்து குழாய் வழியாக குத்தாலம் மையத்திற்கு எரிவளி வந்துசேர்கிறது.

இப்போது அந்த குழாய்களைச் செப்பனிடும் மராமத்துப் பணிகளை ஒன்ஜிசி மேற்கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி ஏற்கனவே உள்ள குழாய்களை அகற்றிவிட்டு புதிதாக குழாய்களைப் பதிக்கும் பணி நடைபெறுகிறது.

ஆனால் அது மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஆய்வுப் பணிதான் என்ற அய்யமும் அச்சமும் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டது.

இதனால் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். ஆயிரக்கணக்கானோர் திரண்டு புதிதாகக் குழாய் அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.

ஒஎன்ஜிசியோ இது மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் ஷேல் என்கின்ற திட்டமே அல்ல என மறுத்து தன் பணியைத் தொடர்ந்தது.

ஆனால் மக்களின் அய்யமும் அச்சமும் போகவில்லை. ஜூன் 1 மற்றும் 2 தேதிகளில் மீண்டும் போராட்டம் வெடித்தது. அதில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் த.செயராமனும் கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட தமிழ்த்தேச பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனும் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நூற்றுக்கணக்கான காவலர்கள் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டனர். இது மக்களின் அய்யத்தையும் அச்சத்தையும் மேலும் அதிகப்படுத்தியது. போராடத்தைத் தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து இப்போது அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்குதியில் நான்கு பேர் சேர்ந்து நடமாடவோ வாகனங்களில் பயணிக்கவோ அதில் பொருட்களைக் கொண்டுசெல்லவோக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது அறிவிக்கப்படாத 144 தடை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அப்பகுதியிலிருந்து உடனடியாக காவல் படையினர் வெளியேற வேண்டும் என்கின்றனர். காவல் படை வெளியேறும் வரை போராட்டமும் தொடரும் என்கின்றனர்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள அய்யத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டிய அரசு, அதைச் செய்யாமல் மேலும் கூடுதலான காவலர்களை அங்கு குவித்திருப்பது அம்மக்கள் மீது தொடுத்திருக்கும் போருக்கே ஒப்பாகும் என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

அங்கு குவித்திருக்கும் காவல் படையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; அங்கு நடைபெறுவது “மீத்தேன் போன்ற பேரழிவுத் திட்டப்பணியோ” என்கின்ற மக்களின் அய்யத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x