Published : 26 Nov 2013 12:00 AM
Last Updated : 26 Nov 2013 12:00 AM
ராயப்பேட்டையில் 8-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. சென்னையில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த 8-வது சம்பவம் இதுவாகும்.
சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் இந்நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து ஒரு இளம்பெண் திடீரென கீழே குதித்தார். தலை உள்பட உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு அவர், அந்த இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்து வந்த ராயப்பேட்டை போலீஸ் ஆய்வாளர் ராஜசேகரன் மற்றும் போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதலுக்கு எதிர்ப்பு
தற்கொலை செய்த பெண்ணின் பெயர் ராஜலட்சுமி (24). அயனாவரம் வசந்தா கார்டனைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகளான இவர், தனியார் நிறுவனத்தில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார். வீட்டருகே உள்ள ஒருவரை ராஜலட்சுமி காதலித்ததாக கூறப்படுகிறது. அவரை திருமணம் செய்வது குறித்து நான்கு
நாட்களுக்கு முன்பு தனது வீட்டினரிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ராஜலட்சுமி மனஅழுத்தத்தில் இருந்தாராம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை காலை அலுவலகம் வந்தவர், திடீரென கடைசி தளத்துக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்திருக்கிறார்.
3 மாதத்தில் 52 பேர் தற்கொலை
சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 52 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 7 பேர் கட்டிடங்களில் இருந்து குதித்து இறந்தனர். தரமணியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில், ரேஷ்மா (24) என்ற பெண் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தண்டையார்பேட்டையில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 2 மாத குழந்தையின் தாய் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தும், தீபாவளிக்கு மகள் வீட்டுக்கு வராததால் மனமுடைந்த தந்தை 6-வது மாடியில் இருந்து குதித்தும் தற்கொலை செய்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT