Published : 17 Nov 2013 12:58 PM
Last Updated : 17 Nov 2013 12:58 PM
ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. - தி.மு.க. கட்சியிகளிடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
தி.மு.க. சார்பில் வேட்பாளர் மாறன், அ.தி.மு.க. சார்பில் சரோஜா உள்பட மொத்தம் 27 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தவிர தமிழகத்தில் உள்ள வேறு எந்த பிரதான கட்சிகளும், ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.
ஏற்காடு தொகுதியில் 290 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண் வேட்பாளர்கள் 1,19,190 பேர். பெண் வாக்காளர்கள் 1,21,094 பேர். திருநங்கை ஆறு பேர் என மொத்தம் 2,40,290 பேர் ஓட்டளிக்கவுள்ளனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளரை அறிவிப்பது சம்பந்தமாக எந்த பதிலும் அளிக்காமல் மவுனம் காத்தார். பா.ம.க.வும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டது. காங்கிரஸ், பா.ஜ.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளும் இடைத்தேர்தல் சம்பந்தமாக வாய் திறக்கவில்லை. பிரதான கட்சிகள் அனைத்தும் பின் வாங்கிய நிலையில் அ.தி.மு.க. - தி.மு.க.விடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. தரப்பு 32 அமைச்சர்கள், கட்சியின் அமைப்புச் செயலாளர்கள், வாரியத் தலைவர்கள் என 61 பேர் கொண்ட படை பலத்தை ஏற்காடு தொகுதிக்குள் அனுப்பியுள்ளது.
தி.மு.க., பிற கட்சிகளின் ஆதரவுடன் குறைந்தபட்ச ஓட்டு வித்தியாசத்திலாவது வெற்றி வாகை சூட வேண்டும் என்ற கட்டாயத்தில் முன்னாள் அமைச்சர்களை மேலிடம் களம் இறக்கியுள்ளது.
தே.மு.தி.க. ஓட்டு யாருக்கு?
பிரதான எதிர்கட்சியான தே.மு.தி.க., இடைத்தேர்தலில் போட்டியிடாததால் அக்கட்சியின் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். யாருக்கு ஆதரவாக வாக்களிப்பது என்று மேலிடத்தில் இருந்து ரகசிய உத்தரவு வரும் என்ற நம்புகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT