Published : 11 Nov 2013 12:00 AM
Last Updated : 11 Nov 2013 12:00 AM
சென்னையில் ஒரு குடம் தண்ணீர், ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டிய அமைச்சர் ஏற்காட்டில் தேர்தல் பணியில் இருக்கிறார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் ஒரு குடம் தண்ணீர் ஐந்து ரூபாய் என்று ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அம்மா குடிநீர் ஒரு லிட்டர் 10 ரூபாய்க்கு விற்கும்போது, ஒரு குடம் தண்ணீர் ஐந்து ரூபாய் என்பது எவ்வளவோ மலிவு என்று அதிமுக ஆட்சியினர் சமாதானம் கூறுவர்.
ஒருநாள் விட்டு ஒருநாள் விடப்படும் குடிநீர் கூட மூன்று மணி நேரமே வருவதால், குடிநீர் பற்றாக்குறையாக இருக்கிறது. வேறு வழியில்லாமல் தனியாரிடம் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் அவலம் ஏற்பட்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
ஏற்காட்டில் அமைச்சர்
‘குடிநீர் கலங்கலாக இருக்கிறது. புழுக்கள் நெளிகின்றன. வடிகட்டி பயன்படுத்தினாலும் நன்றாக இல்லை. மழைக்காலத்தில், குடிநீரில் கழிவுநீர் நாற்றம் அடிக்கிறது. அதனால்தான் 7 மாதங்களாக பணம் கொடுத்து வாட்டர் கேன் வாங்குகிறோம்’ என்றெல்லாம் மக்கள் கூறியதாக குறிப்பிட்டிருப்ப தோடு, மேலும் பல குறைகளை ‘தி இந்து’ எழுதியுள்ளது.
இந்தப் பிரச்சினைகளை கவனிக்க, இந்த அரசில் அமைச்சர் இல்லையா என்று கேட்டால், ‘இருக்கிறார், ஆனால் அவர் ஏற்காட் டில் இடைத்தேர்தல் அராஜகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்’ என்ற பதில் கிடைக்கும். முதல்வர் இல்லையா என்று கேட்டால், அவர் சிறுதாவூரில் இருக்கிறார் என்று பதில் கிடைக்கும்.
காமன்வெல்த் மாநாடு
இங்கிலாந்து நாட்டில் உள்ள தமிழர்கள், பிரதமர் டேவிட் கேமரூனைச் சந்தித்து, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற வேண்டுகோளை வலியுறுத்தியுள்ளனர். கனடா நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ‘‘இலங்கையில் நீதி நெறிமுறைக்கு அப்பால் நடந்துள்ள மனிதப் படுகொலைகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், அரசியல் வாதிகள்,பத்திரிகையாளர்கள் கைது போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டேன்” என்று அறிவித்திருக்கிறார். தென்ஆப்ரிக்க அமைதிப் பிரசாரகர் ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுடு, காமன்வெல்த் மாநாட்டை உலகத் தலைவர்கள் புறக்கணிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் விளையாட்டு மேம்பாட்டுக்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. தற்போது நடக்கும் உலக சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்ளும் விஸ்வநாத் ஆனந்தைப் பெருமைப்படுத்தும் நிகழ்ச்சிகளே திமுக ஆட்சியில் நடந்துள்ளன.
மக்கள் நலப் பணியாளர்கள்
மீண்டும் வேலை கேட்டு சென்னையில் 5 இடங்களில் மறியல் நடத்த முயன்ற மக்கள் நலப் பணியாளர்களை போலீசார் லத்தியால் அடித்து விரட்டிய புகைப்படங்கள் ஏடுகளில் வெளிவந்திருக்கிறது. அவர்களில் 700-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அதிமுகவுக்கு வாக்களித்த தமிழக மக்களே ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT