Published : 26 Oct 2013 10:05 AM Last Updated : 26 Oct 2013 10:05 AM
சென்னை உள்பட பல மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு
சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: தென் வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, ஆந்திராவில் நிலை கொண்டுள்ளது.
தெலங்கானா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இது நிலை கொண்டிருந்தாலும், காற்றின் வேகம் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கடலோரப் பகுதிகளான சென்னை மற்றும் புதுச்சேரியிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர ஆந்திராவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 25 செ.மீக்கு அதிகமான மழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.
வடகிழக்கு பருவ மழை வட கிழக்கு பருவ மழையால் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8.30மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.
ஆத்தூரில் 5 செ.மீ, ராயக்கோட்டை, பள்ளிப்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், சங்கராபுரம், கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது.
WRITE A COMMENT