Published : 10 Dec 2013 02:17 PM
Last Updated : 10 Dec 2013 02:17 PM

நடுக்கடலில் 15 நாளாக தத்தளித்த காசிமேடு மீனவர்கள் 10 பேர் மீட்பு

நடுக்கடலில் 15 நாட்களாக தத்தளித்த காசிமேடு மீனவர்கள் 10 பேர் கோடியக்கரை அருகே கடலோரக் காவற்படையினரால் மீட்கப்பட்டு, பின்னர் மண்டபம் மீன்பிடித்தளத்திற்கு இன்று காலை 10 மணியளவில் வந்தடைந்தனர்.

கடந்த நவம்பர் 26 அன்று சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடலுக்குள் டூனா மீன் பிடிப்பதற்காக சென்றனர். இதில் ஒரிசாவைச் சேர்ந்தவர்கள் 7 பேரும், ஆந்திராவை சேர்ந்தவர்கள் 2 பேரும், தமிழகத்தைச் சார்ந்த ஒருவரும் அடங்குவர்.

கடந்த டிசம்பர் 4 ஆம் கரைக்கு திரும்ப வேண்டிய மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் விசைப்படகின் உரிமையாளர் சுரேஷ் காசிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர், வங்கக் கடலில் உருவாகிய மாதி புயலால் கடல் கொந்தளிப்பில் மீனவர்களின் படகு சிக்கி இருக்கலாம் என அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்தனர்.

இந்நிலையில், கோடியக்கரையில் நடுக்கடலில் படகில் தத்தளித்துக்கொண்டு இருந்த 10 மீனவர்களை கடலோர காவல் படையினர் மீட்டனர்.

பின்னர், மீனவர்கள் 10 பேரையும் பத்திரமாக மீட்டு, மண்டபம் மீன்பிடித்துறைமுகத்திற்கு கடலோர காவல் படையினர் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து படகின் உரிமையாளர் சுரேஷ் நமது செய்தியாளரிடம் கூறும்போது, "கடந்த 26 ஆம் நாள் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து எனது படகில் 10 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். புயல் சின்னத்தால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் திசை தெரியாமல் 15 நாட்களாக அலைந்து கொண்டிருந்தார்கள்.

பின்னர் திடீரென படகில் இருந்து இன்ஜின் ஆயில் தீர்ந்து விட்டது. அதனைத் தொடர்ந்து கோடியக்கரை பகுதி நடுக்கடலில் மீனவர்கள் படகில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். மீனவர்கள் படகில் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த நமது கடலோர காவற்படையினர் மீனவர்கள் மீட்டு தற்போது மண்டபம் மீன்பிடித்துறைமுகத்தில் விட்டுச் சென்றனர்" என்றார்.

கவலையில் ஆழ்ந்திருந்த மீனவர்ககளின் குடும்பம் தற்போது மீனவர்கள் மீட்கப்பட்டு மண்டபம் மீன்பிடித்தளத்திற்கு வந்திறங்கிய தகவல் உடனே தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த மீனவ குடும்பத்தினர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x