Published : 17 Sep 2013 01:24 PM
Last Updated : 17 Sep 2013 01:24 PM
ஈரான் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள 16 மீனவர்களையும் தங்களது சொந்த கிராமங்களுக்கு அனுப்பிவைக்க, மீன்வளத் துறைக்குத் தமிழக முதல்வர் ஜெயல்லலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சவுதி அரேபிய நாட்டில், தனியார் மீன்பிடி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த ராமநாதபுரம் மாவட்டம், காரங்காடு, முள்ளிமுனை, மோர்ப்பனை, திருப்பாலைக்குடி மற்றம் ரோச்மாநகர் மீனவ கிராமங்களைச் சேர்ந்த பத்து மீனவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம் பழையார் கிராமத்தினை சேர்ந்த ஒரு மீனவர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மற்றும் ஆரோக்கியபுரம் மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் என மொத்தம் 16 தமிழக மீனவர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சவுதி அரேபியா நாட்டிலிருந்து தனியார் மீன்பிடி கப்பலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தவறுதலாக ஈரான் நாட்டு கடல் எல்லைப்பகுதிக்குள் சென்றதன் காரணமாக, அந்நாட்டு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனை விசாரித்த ஈரான் நாட்டு நீதிமன்றம், கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒவ்வொருவரும் 5,750 அமெரிக்க டாலரை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும், அபராதத் தொகையுடன் 6 மாத கால சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
இதனை அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், ஈரான் நீதிமன்றம் விதித்த இரண்டு தண்டனைகளில், ஆறு மாத கால சிறை தண்டனையை தமிழக மீனவர்கள் அனுபவித்து விட்டார்கள் என்றும், வறுமை நிலை காரணமாக அபராதத் தொகையை கட்ட இயலாததால் ஈரான் நாட்டு அரசாங்கம் அவர்களை சிறையிலிருந்து விடுவிக்கவில்லை என்றும் தெரிவித்து, ஈரான் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் எவ்விதமான சட்ட உதவிகளையும் தமிழக மீனவர்களுக்கு அளிக்கவில்லை என்பதையும், மீனவர்களை விடுவிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி, ஈரான் நாட்டு சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இது மட்டுமின்றி, ஈரான் நாட்டு சிறையில் அடைபட்டிருந்த 16 தமிழக மீனவர்களின் குடும்பங்களின் வறிய நிலையினை கருணையுடன் பரிசீலித்து, அவர்களது குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.
முதல்வர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பயனாக, 16 தமிழக மீனவர்களும் ஈரான் நாட்டு சிறையிலிருந்து 16.9.2013 அன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட 16 மீனவர்களும் விமானம் மூலமாக 17.9.2013 அன்று நண்பகல் 12 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைகின்றனர். இந்த 16 தமிழக மீனவர்களையும் மும்பை விமான நிலையம் சென்று வரவேற்குமாறு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபாலுக்கு உத்தரவிட்டதோடு, அவர்களை தங்களது சொந்த கிராமங்களுக்கு தமிழ்நாடு அரசின் செலவில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT