Published : 25 Nov 2013 12:00 AM
Last Updated : 25 Nov 2013 12:00 AM
சென்னையில் பெரும்பாலான தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடு கிறது. கொசுத் தொல்லை, சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை நகரின் மக்கள் தொகை 80 லட்சம். வேலை உள்ளிட்ட விஷயங்களுக்காக தினமும் வந்து செல்வோரின் எண்ணிக்கை 20 லட்சம். ஆக மொத்தம் 1 கோடி பேருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இங்கு இல்லை என்று புகார் கூறப்படுகிறது. தெருக்களில் கழிவு நீர் வழிந்தோடுவதே இப்போது முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது.
சிறிய கழிவுநீர் குழாய்கள்
மக்கள் நெருக்கம் மிகுந்த வடசென்னையில், 40 ஆண்டுக ளுக்கு முன்பு இருந்த வீடுகள், மக்கள் தொகை அடிப்படையில் பாதாள சாக்கடைகள் அமைக்கப் பட்டுள்ளன. ஆனால், இப்போது வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதற்கேற்ப கழிவுநீர் வெளியேற்ற வசதிகள் செய்து தரப்படவில்லை.
அதனால் பல பகுதிகளில் சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் வெளியேறுவதாக மக்கள் பல ஆண்டுகளாக புகார் கூறி வருகின்ற னர். அது இப்போது பெரிதும் அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர். கழிவுநீர் ஆறாக ஓடுவதால் சாலை யில் நடப்பதே சிரமமாக உள்ளது. அந்த இடத்தை சில நிமிடங்களில் கடந்து செல்பவர்களுக்கே நாற்றம் தாங்க முடியவில்லை என்றால் அங்கே குடியிருப்பவர்களின் நிலை சொல்லி மாளாது. கழிவுநீர் தேக்கத்தால் கொசுத் தொல்லையும் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக சிக்குன் குனியா, டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வேதனையின் உச்சம்
வியாசர்பாடியில் ஏபிசி கல்யாண புரம், சத்தியமூர்த்தி நகர், மல்லிகைப்பூ காலனி, சாமந்திப்பூ காலனி, ஜெகஜீவன்ராம் நகர், உதயசூரியன் நகர், எம்.ஜி.ஆர்.நகர், சாஸ்திரி நகர், பக்தவத்சலம் காலனி, சர்மா நகர், சிவகாமி அம்மையார் காலனி, எருக்கஞ்சேரி ஆகிய பகுதிகளில் எப்போது பார்த்தாலும் கழிவுநீர் ஆறாக ஓடுவது வேதனையின் உச்சம்.
பெரம்பூரில் ராகவன் தெரு, சங்கரமடம் தெரு, நீலம்கார்டன் 4-வது தெரு, மதுரை சாமிமடம் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி, பால வித்யாலயா பள்ளி அருகில், ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெரு, புரசைவாக்கம் வெங்கடேசன் தெரு, சுந்தரம் தெரு, சூளை லெட்டாங்க்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, பெரியமேடு நேவல் மருத்துவமனை 2-வது தெரு, ஸ்டிங்கர்ஸ் சாலை, மடாக்ஸ் தெரு ஆகிய இடங்களிலும் கழிவுநீர் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. மாநகர் முழுவதும் கணக்கெடுத்தால், கழிவுநீர் வழிந்தோடும் பகுதிகளின் பட்டியல் ஏட்டில் அடங்காது.
இதுகுறித்து புகார் கூறினால், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜெட்ராடிங் இயந்திரத்தைக் கொண்டு கழிவுநீர் அடைப்பை சரிசெய்துவிட்டு போகின்றனர். நிரந்தரத் தீர்வுக்கு குடிநீர் வாரியம் எதையும் செய்யவில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
ஏன் இந்த பாரபட்சம்?
வடசென்னையில் பெரும்பாலான இடங்களிலும், மத்திய சென்னை யில் பல பகுதிகளிலும் இந்தப் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால் அடையாறு, ராஜா அண்ணாமலை புரம், கோபாலபுரம், பெசன்ட்நகர், போயஸ் கார்டன், ஆழ்வார்பேட்டை, ஆகிய பகுதிகளில் கழிவுநீர் பிரச் சினை பெரிய அளவில் இல்லை.
இதுகுறித்து தேவை என்ற பெய ரில் அமைப்பு நடத்தும் இளங்கோ கூறுகையில், “வடசென்னையில் கழிவுநீர்தான் முக்கியப் பிரச்சினை. நாங்கள் மட்டும் மனிதர்கள் இல்லையா? நாங்கள் வரி கட்டவில்லையா? எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலம்?” என்கிறார் ஆதங்கத்துடன்.
திமுக ஆட்சியில் சிங்காரச் சென்னை என்று முழக்கம் எழுப்பப் பட்டது. இப்போது எழில்மிகு சென்னை என்கின்றனர். குண்டும் குழியுமாக இல்லாத சாலைகள், கழிவுநீர் ஓடாத தெருக்கள் என்ற நிலையை எட்டினால்தான் இந்த முழக்கங்கள் சாத்தியமாகும்.
ரூ.300 கோடி அறிவிப்பு
சென்னையில் ரூ.300 கோடியில் 337 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், சிறிய அளவிலான குழாய்களை அகற்றிவிட்டு, அதிக விட்டம் கொண்ட கழிவுநீர் உந்து குழாய்கள் அமைக்கப் படும் என்றும் கடந்த ஜூனில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.நீர் ஆதாரங் கள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். இதற்காக சென்னையில் உள்ள நீர்வழிப் பாதைகளில் கழிவுநீர் கலக்கக்கூடிய 337 இடங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய ரூ.300 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். பிரதான கழிவுநீர் குழாய் அமைத்தல், சிறிய அளவிலான குழாய்களை அகற்றிவிட்டு, அதிக விட்டம் கொண்ட கழிவுநீர் உந்து குழாய்கள் அமைத்தல், சாலையோரம் சிறிய கழிவு நீரேற்றும் நிலையங்கள் அமைத்தல், ஏற்கனவே உள்ள கழிவுநீரேற்று நிலையங்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT