Published : 25 Nov 2013 10:35 AM
Last Updated : 25 Nov 2013 10:35 AM
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே இரு கிராம மக்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை மாலை கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கிராமத்தில் இருந்த ஆறு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. 20 வீடுகள் சூறையாடப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கலவரத்தில் ஈடுபட்டதாக 250 பேரை போலீஸார் பிடித்துச் சென்று, அதில் 80 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை அருகே கரியாம் பட்டி, நடுப்பட்டி கிராமங்களில் வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த இரு கிராம மக்களிடையே, கடந்த ஒரு ஆண்டாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
கடந்த இரு மாதங்களுக்கு முன் மீண்டும் கரியாம்பட்டி, நடுப்பட்டி இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடவடிக்கை எடுக்கக் கோரி, நடுப்பட்டி கிராம மக்கள் அருகில் உள்ள தங்கால்பட்டி மலை அடிவாரத்தில் குடியேறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர், மாவட்ட ஆட்சியர் அவர்களை சமாதானம் செய்து, போராட்டத்தைக் கைவிடச் செய்தார். கடந்த இரு மாதங்களாக அக்கிராமங்களில் கண்காணிப்புக் காமிரா வைத்து போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கரியாம்பட்டி யைச் சேர்ந்த பெண் ஒருவரை நடுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் கிண்டல் செய்தனராம். இதையறிந்த கரியாம்பட்டி மக்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை திரண்டு சென்று, நடுப்பட்டி கிராமத்தில் உள்ள குடிசை வீடுகளுக்கு தீ வைத்தனர். வீடுகளில் இருந்த டி.வி., பாத்திரங்களை உடைத்து நொறுக்கினர். வீட்டு மேற் கூரைகளும் சேதப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரு கிராம மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
நடுப்பட்டியைச் சேர்ந்த சுபம்மாள், ராஜா, முத்துபாண்டி, முருகன், லட்சுமணன், குள்ளத்தி ஆகிய ஆறு பேர்களின் குடிசை வீடுகள் தீ வைத்து கொளுத்தப் பட்டன. சக்திவேல், காட்டுராஜா, மாரியம்மன், மணிகண்டன், பொன்னம்மாள், மணி, கூத்தால், மாரியப்பன், முருகவேல், அழகம்மாள் உள்பட 20 பேரின் வீடுகள் நொறுக்கப்பட்டன.
தகவல் அறிந்த நிலக்கோட்டை தீயணைப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று, வீடுகளில் பற்றிய தீயை அணைக்கப் போராடினர். நடுப்பட்டி கிராமத்தில் தெருக்கள் மிகவும் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் செல்ல முடியாமல் திணறினர்.
டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், தேனி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் ஏராளமான போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன்பின் கரியாம்பட்டியைச் சேர்ந்த 200 பேர், நடுப்பட்டியைச் சேர்ந்த 50 பேர் உள்பட மொத்தம் 250 பேரை போலீஸார் பிடித்துச் சென்று, அதில் 80 பேரை கைது செய்தனர்.
இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அக்கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவுவதால், 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT