Published : 09 Oct 2014 10:55 AM
Last Updated : 09 Oct 2014 10:55 AM
சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளி, ஆயுள் தண்டனை பெற்ற ஆண்டியப்பன், 24 ஆண்டுக்குப் பின் பரோலில் வீடு திரும்பியுள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் உயிரோடு இருந்தபோது, 1987-ம் ஆண்டு குண்டேறிபள்ளம் பகுதி யில் ரேஞ்சர் சிதம்பரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் வீரப்பன், அவரது சகோதரர் மாதையன் மற்றும் ஆண்டியப்பன், பெருமாள், முருகேசன், குழந்தைசாமி, செந்தாமரை உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 1990-ம் ஆண்டு ஆண்டியப்பனை அதிரடிப் படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு நீதிமன்றத்தில், கடந்த 97-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி மாதையன், பெருமாள், ஆண்டியப்பன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற 5 பேரை வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 90-ம் ஆண்டு முதல் ஆண்டியப்பன்(55) கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். கொளத்தூர் அருகே உள்ள காவிரிபுரத்தில் ஆண்டியப்பனின் மனைவி குழந்தையம்மாள் வசிக்கிறார்.
இந்நிலையில், குழந்தை யம்மாள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், முதல் முறையாக 3 நாள் பரோலில், கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று, நன்னடத்தை விதிமுறையின் கீழ், காவல் கண்காணிப்பு இல்லாமல் ஆண்டியப்பன் வந்துள்ளார்.
ஆண்டியப்பனின் வழக்கறிஞர் ஜூலியஸ், அவரை காவிரிபுரத் துக்கு அழைத்து வந்தார். பல ஆண்டுகளுக்கு பின் வீடு திரும்பிய ஆண்டியப்பனை, அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT