Published : 30 Oct 2013 04:40 AM Last Updated : 30 Oct 2013 04:40 AM
தீபாவளிக்கு 8,350 சிறப்பு பேருந்துகள்: கோயம்பேட்டில் 15 சிறப்பு முன்பதிவு மையங்கள்
தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் முன் பதிவு செய்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 சிறப்பு முன் பதிவு மையங்கள் செவ்வாய்கிழமை திறக்கப்பட்டன.
சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் பெரும்பாலோர், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் கணிசமானோர் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
இச்சூழலில், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமர் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் முன் பதிவுகள் முடிந்துவிட்டன. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிக்கைக்காக 8 ஆயிரத்து 350 சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
இதில், சென்னை, கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து மட்டும் 4,300 சிறப்பு பஸ்கள், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர், புதுச்சேரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு பஸ்கள், அக்டோபர் 29, 30, 31,1 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு பஸ்களில் செல்வதற்கு, சிரமம்மில்லாமல் முன் பதிவு செய்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட 15 சிறப்பு முன் பதிவு மையங்களை செவ்வாய்கிழமை போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.
WRITE A COMMENT