Published : 14 Nov 2013 04:17 PM
Last Updated : 14 Nov 2013 04:17 PM
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீனவப் பிரதிநிதிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் இன்று உறுதியளித்தார்.
பின்பிடித் தொழிலில் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளைக் களையும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் இன்று தமிழக மீனவப் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து முறையிட்டனர்.
இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டிலும் தாக்குதலிலும் தமிழக மீனவர்கள் பலர் உயிரிழந்தனர். இதனால், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக கூலிக்கு மற்றவர்களிடம் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தற்போது நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பலர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களது 42 மீன்பிடி படகுகளையும் இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துவைத்துள்ளது.
பல லட்ச ரூபாய் கடனில் வாங்கிய விசைப் படகுகளை இழந்துள்ளதால், பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும், மீனவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு மத்திய அரசை பலமுறை வலியுறுத்தியும், தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியும் இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் புதுச்சேரி, நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் 9 பேர் தேசிய மீனவர் பேரவையின் செயலர் இளங்கோவன் தலைமையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்துத்து தங்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், "குஜராத்தைச் சேர்ந்த 280 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 81 மீனவர்களை இலங்கை சிறையில் அடைத்துள்ளது.
மீனவர்களின் பிரச்சினைகளை முழுமையாக எடுத்துக்கூறினோம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், படகுகளை மீட்பதற்கும் பிரதமர் எங்களிடம் உறுதியளித்தார்.
தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக இலங்கையுடன் சென்னையில் பேச்சு நடத்த தமிழக அரசு தயாராக இருக்கிறது. இலங்கை தமது நாட்டில் கூட்டம் நடத்த விரும்புகிறது. சென்னையில் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அதிகாரிகளிடம் பேசுமாறு வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றார் இளங்கோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT