Published : 17 Oct 2013 09:40 PM
Last Updated : 17 Oct 2013 09:40 PM

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது சந்தேகம்

தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப்பு காரணமாக, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வதற்கு சாத்தியம் இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, பி.டி.ஐ. செய்தி நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்தி வெளியிட்டுள்ளது.

திமுக உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தெரிவித்து வரும் எதிர்ப்பின் எதிரொலியாக, மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

காமன்வெல்த் மாநாடு, நவம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது. இலங்கை தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த இந்தியா உள்பட 54 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, சென்னையில் கடந்த 1-ம் தேதி முதல் 15 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

இதனிடையே, டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வலியுறுத்தினார். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தியாகுவின் உடல்நிலை குறித்தும் பிரதமரிடம் விளக்கினார்.

அப்போது பிரதமர் மன்மோகன் சிங், 'காமன்வெல்த் மாநாடு விவகாரத்தில் தமிழ் மக்கள் மற்றும் உங்கள் கட்சியின் (திமுக) உணர்வுகளை மதித்து நல்ல முடிவு எடுப்போம். திமுக தலைவர் கருணாநிதி தலையிட்டு, தியாகுவின் போராட்டத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று டி.ஆர்.பாலுவிடம் கூறினார். அதுதொடர்பான கடிதத்தையும் பாலுவிடம் மன்மோகன் வழங்கினார். இதைத் தொடர்ந்து, தியாகு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

இந்த நிலையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமருக்கு இன்று (வியாழக்கிழமை) எழுதிய கடிதத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன், அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், மாணவர்களும் மிகப் பெரிய அளவில் போராட்டங்களை சாத்தியம் உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x