Published : 21 Oct 2014 10:16 AM
Last Updated : 21 Oct 2014 10:16 AM
இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட திருவள்ளூர் தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளதால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழக தேர்தல் ஆணையத் தின் சார்பில், கடந்த 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறு படிகள் உள்ளன.
உதாரணமாக, திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண்.186 வெங்கத்தூர் ஊராட்சி என்ற பகுதிக்குள் உள்ளே சென்று வாக்காளர் பட்டியலைப் பார்த்தால், வெங்கத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்களின் பெயர்களுக்கு பதில், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட முகம்மது அலி தெரு சந்து 1, 2 மற்றும் 3 ஆகிய தெருக்கள் உள்ளன.
அதேபோல், திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண்.205 திருப்பந்தியூர் ஊராட்சி என கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் உள்ள வாக்காளர் பட்டியலில் வெங்கத்தூர் ஊராட் சிக்கு உட்பட்ட நேரு தெரு, நேரு குறுக்குத் தெரு 1,2, மற்றும் 3, வேலு நாச்சியார் தெரு, திருவள்ளுவர் தெரு, இளங்கோ தெரு, ஐயப்பன் தெரு ஆகிய தெருக்களில் வசிப்போரின் வாக்காளர் பட்டியல் இடம் பெற்றுள்ளது.
தற்போது பலரும் இணைய தளம் மூலமாகவே வாக்காளர் பட்டியலில் திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கம், சரிபார்த்தல் போன்ற விஷயங்களை செய் கின்றனர். இந்நிலையில், இணையதளத்தில் இதுபோன்ற குளறுபடியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் பொது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி யுள்ளது.
இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவ.10-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் சரியான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டால்தான் மக்கள் தங்கள் பெயரை சரிபார்த்து பெயர் விடுபட்டிருந்தால் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். எனவே, சரியான முறையில் வரைவு வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, இப்பிரச்சினை குறித்து உரிய ஆய்வு செய்யப்பட்டு, இணையதளத்தில் திருத்தம் செய்யப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT