Published : 28 Oct 2014 06:45 PM
Last Updated : 28 Oct 2014 06:45 PM

தமிழக அரசால் நீதிமன்றம் வேதனை: சகாயம் நியமன விவகாரத்தில் கருணாநிதி சாடல்

தமிழக அரசு தனது செயல்பாடுகளால் நீதிமன்றத்தை வேதனைப்பட வைக்கிறது என்று குறிப்பிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, சகாயம் விசாரணைக் குழுவை செயல்படுவதற்கான ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கிரானைட் எடுப்பதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதுபற்றி அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியும், மதுரை மாவட்டத்தில் ஆட்சித் தலைவராகப் பணியாற்றியவருமான சகாயம் தலைமையில் குழு ஒன்று அமைத்து விசாரிக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் 11-9-2014 அன்று சகாயம், ஐ.ஏ.எஸ்., தலைமையில் விசாரணைக் குழுவினை அமைத்ததோடு, உடனடியாக அந்தக் குழு விசாரணையை முடித்து அறிக்கை தர வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

"உயர் நீதிமன்றம் அளித்த பொதுவான உத்தரவு ஆயிற்றே, நல்ல நோக்கத்தோடு தானே அளித்திருக்கிறது" என்று தமிழக அ.தி.மு.க. அரசு அதனை எடுத்துக் கொள்ளாமல், அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

அப்போதே, இது பற்றி நான் கூறும்போது, "இதில் இருந்தே கிரானைட் குறித்த முறைகேடுகள் வெளியே வந்து விடக் கூடாது என்பதில் இந்த அரசு எந்த அளவுக்கு அக்கறையாக உள்ளது என்பதைச் சுலபத்தில் தெரிந்து கொள்ளலாமே!

சென்னை உயர் நீதி மன்றத்தில் இந்த வழக்கு வந்த போதே, இரு தரப்பினரின் வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் தமிழகம் முழுவதும் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்காக சகாயம், ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு அமைத்தும், அந்தக் குழு தனது அறிக்கையை அக்டோபர் 28ஆம் தேதிக்குள் நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டனர். ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து, அதற்குத் தடை விதிக்க வேண்டுமென்று கோரி, அ.தி.மு.க. அரசு உச்ச நீதி மன்றத்தில் "அப்பீல்" செய்துள்ளது.

அவருடைய தலைமையில் தற்போது கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணைக் குழு அமைந்தால், சகாயத்தினால் சங்கடங்கள் ஏற்பட்டு, பல உண்மைகள் வெளிவந்து விடுமோ என்று இந்த அரசு அஞ்சுகிறது என்றுதான் அவர்கள் செய்து கொண்டுள்ள "அப்பீலை"ப் பார்க்கும்போது தெரிகிறது" என்று தெரிவித்திருந்தேன்.

தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மேல் முறையீட்டு மனுவினை உச்ச நீதி மன்றமும் 18-9-2014 அன்று தள்ளுபடி செய்தது. ஆனால் அதையும் அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொண்டு, அதிகாரி சகாயத்தை இந்தப் பிரச்சினை குறித்து விசாரிக்க அனுமதிக்கவில்லை. மாறாக சகாயம் நியமனம் தொடர்பாக மறு சீராய்வு செய்ய வேண்டுமென்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள் கவுல் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இன்று தமிழக அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

"சகாயம் விசாரிப்பதால் நீங்கள் ஏன் அச்சப்படுகிறீர்கள்? எங்களின் உத்தரவை இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இவ்வளவு நாள் ஏன் காலதாமதம் செய்தீர்கள்?" என்றெல்லாம் அரசு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பியதோடு, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து, மேலும் தமிழக அரசுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

மேலும் அதிகாரி சகாயம் தற்போதுள்ள பொறுப்பிலிருந்து விடுவித்து, நான்கு நாட்களில் அவர் தலைமையிலே குழு அமைத்து அரசாணை பிறப்பிக்க வேண்டுமென்றும், ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அவருக்கு வழங்க வேண்டுமென்றும், விசாரணைக்கு முழு நிதி உதவி ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் இன்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்சியாளர்களின் இப்படிப்பட்ட செயல்பாடுகளால் நீதிமன்றம் எந்த அளவுக்கு வேதனைப்பட்டு தீர்ப்பளித்துள்ளது என்பதை எண்ணிப் பார்த்து, உடனடியாக சகாயம், ஐ.ஏ.எஸ். விசாரணைக் குழுவினை செயல்படுவதற்கான ஆணைகளைப் பிறப்பிப்பதோடு, எதிர்காலத்தில் இப்படிப்பட்ட காழ்ப்புணர்வுகளைக் கைவிட்டு மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x