Published : 29 Jun 2017 10:42 AM
Last Updated : 29 Jun 2017 10:42 AM

அடிக்கடி இருளில் மூழ்கும் பாம்பன் பாலம்: அச்சத்தோடு கடக்கும் சுற்றுலா பயணிகள்

தமிழகத்துடன் ராமேசுவரம் தீவை இணைக்கும் பாம்பன் பாலம், இரவு நேரங்களில் அடிக்கடி இருளில் மூழ்குவதால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்தோடு வாகனங்களில் பாலத்தை கடந்து செல்கின்றனர்.

தமிழகத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பது அன்னை இந்திராகாந்தி பாம்பன் சாலைப் பாலம். இரண்டரை கி.மீ. நீளமுள்ள இந்த பாம்பன் பாலத்தில் இருந்து மன்னார் வளைகுடா, பாக். ஜலசந்தி கடல்கள், பாம்பன் ரயில் பாலம், பவளப் பாறைகள், குருசடைத் தீவு, மணலி தீவு, மணலிபுட்டி தீவு, கலங்கரை விளக்கம் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். 1987-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலத்தில் 2014-ம் ஆண்டில் ரூ. 18.56 கோடி செலவில் மராமத்துப் பணிகள் செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் வசதிக்காக பாலத்தின் இருபக்கமும் உள்ள மின் கம்பங்களில் 432 எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ரயில் பாலத்தை கடந்துசெல்லும் ரயில்கள், தூக்கு பாலத்தை கடந்து செல்லும் கப்பல்கள், படகுகள் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக பாலத்தில் 10 மின்கோபுர விளக்குகளும் அமைக்கப்பட்டன. இந்தநிலையில், கடந்த ஒரு வாரமாக இரவு 7 மணிக்கு மேல் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் முற்றிலும் ஒளிர்வதில்லை. சில நேரங்களில் பாலத்தின் ஒருபுறத்தில் மட்டும் சில மின்விளக்குகள் ஒளிர்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களில் பாம்பன் பாலத்தில் போடப்பட்டுள்ள புதிய சாலையால் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இரவு நேரங்களில் பாம்பன் பாலத்தில் விளக்குகள் ஒளிராததால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு பாலத்தை கடந்து செல்கின்றனர்.

இதுகுறித்து பாம்பனைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தாகிர் சைபுதீன் கூறியதாவது: கடந்த காலத்தில் மண்டபம் பேரூராட்சி சார்பில் பாம்பன் பாலத்துக்கு சுங்கவரி வசூலிப் பதற்கான குத்தகை தனியாருக்கு வழங்கப்பட்டு நீண்டகாலமாக வசூலித்து வந்தனர். இதன் மூலம் பாம்பன் பாலத்துக்கான மின் கட்டணம் செலுத்தப்பட்டது.

சமீபத்தில் இந்த சுங்கச்சாவடியை அகற்றி விட்டனர். இதனால் மின் கட்டணத்தை யார் செலுத்துவது என குழப்பம் நீடிக்கிறது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பாம்பன் பாலம் இருளில் மூழ்கி வருகிறது.

பாலத்தில் சூரிய சக்தி மூலம் எரியக்கூடிய விளக்குகளை பொருத்துவதே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x