திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் புதன்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஒரே நாளில் ரூ.1.20 லட்சத்துக்கு ரயில் டிக்கெட் விற்பனையானது.
மன்னார்குடி - திருப்பதி விரைவு ரயிலில் திருப்பதி செல்லும் பக்தர்கள், காலை 9 மணியிலிருந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குழுமினர்.
ஒரு கவுன்ட்டரில் மட்டும் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கப்பட்டது. கூட்டம் அதிகரித்ததால், ரயில்வே ஊழியர்கள் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இறங்கினர். பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையினர் வந்ததும், 10.20 மணிக்கு 2-வது கவுன்ட்டர் திறக்கப்பட்டது. சுமார் 820 டிக்கெட் விற்பனையானதும், 11 மணிக்கு டிக்கெட் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. அடுத்து வரக்கூடிய விழுப்புரம் - கரக்பூர் அதிவிரைவு ரயிலில் செல்ல பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு மன்னார்குடி - திருப்பதி விரைவு ரயில், காலை 11.03 மணிக்கு வந்தடைந்தது. அதில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் ரயிலில் ஏறுவதில் சிரமம் ஏற்பட்டதால், 2 நிமிடம் மட்டும் நிற்க வேண்டிய ரயில், 7 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டது. ரயிலில் ஏற முடியாத பயணிகள், அடுத்த ரயிலுக்காக நடைமேடையிலேயே நின்றுவிட்டனர்.
போளூர், ஆரணி ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தில் மட்டும் நேற்று ஓரே நாளில் டிக்கெட் விற்பனை சுமார் ரூ.1.20 லட்சத்தை கடந்திருக்கும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால், கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி வரை நீட்டிக்கலாம்
‘மன்னார்குடி திருப்பதி ரயிலில் 16 பெட்டிகளே உள்ளன. விஷேச நாட்களில் கூடுதல் பெட்டிகள் சேர்த்தால் நெருக்கடியை சமாளிக்கலாம். திருப்பதிக்கு பகலில் ரயில்கள் இல்லாததும் கூட்டத்துக்கு காரணம். விழுப்புரத்திலிருந்து தி.மலை வழியாக காட்பாடி வரை செல்லும் பாசஞ்சர் ரயிலை திருப்பதி வரை நீட்டிக்கலாம்’ என, பக்தர்கள் கூறியுள்ளனர்.
WRITE A COMMENT