Published : 06 Dec 2013 12:23 PM
Last Updated : 06 Dec 2013 12:23 PM
மனிதகுலத்தின் மணிவிளக்கு; உரிமைப்போரின் விடிவெள்ளி; காலத்தால் அழியாத கருப்பு மலர் என நெல்சன் மண்டேலாவுக்கு வைகோ புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு, மதிமுக பொதுச் செயலர் வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தி:
"நீண்ட நெடிய மனிதகுல வரலாற்றில் மகத்தான தியாகத்தாலும், மரணத்தை எதிர்கொள்ளும் துணிச்சலாலும் அழியாப் புகழ் படைத்த வரலாற்று நாயகரான நெல்சன் மண்டேலா மறைந்தார் என்ற செய்தியால் அகிலமே துக்கத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்துவிட்டது. அம்மாமனிதரின் உயிர் ஓய்ந்து உடல் சாய்ந்தாலும் மண்ணும் விண்ணும் இருக்கும் வரை புகழின் சிகரமாக வாழ்கிறார்.
தென்னாப்பிரிக்க நாட்டில் கருப்பர் இன மக்களுக்கு, வெள்ளைத் நிறத்தினர் பூட்டிய ஆதிக்க அடிமை விலங்குகளை உடைத்தெரிந்த சகாப்தத்தின் பெயர்தான் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்காவில், பழங்குடியினரின் அரச குடும்பத்தில், சோசா இனக்குழுவில் 1918 ஜூலை 18 இல் பிறந்தார். சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். கறுப்பர்களை விடுவிக்க 1912 இல் நிறுவப்பட்ட ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்து, இளைஞர் மன்றத்தில் இணைந்து, படிப்படியாக இயக்கத்தில் வளர்ந்து அதன் தலைவரானார்.
1952 இல் அடக்குமுறைக்கு ஆளாகி, சிறைவாசம் ஏற்றவர், விடுதலைக் கிளர்ச்சியை முன்னெடுத்ததால், மீண்டும் 1956 டிசம்பர் 5 இல் ராஜதுரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகள் சிறைவாசம் ஏற்று, விடுதலையான பின், கறுப்பர்களை மீட்க ஆயுதப் போராட்டமே வழியாகும் என அறிவித்து, 'தேசியத்தின் ஈட்டிமுனை' என்ற அமைப்புக்குத் தலைவரானார். 'அரசின் வன்முறையை எதிர்த்து, மக்களின் வன்முறைதான் புரட்சியாகும்' எனப் பிரகடனம் செய்தார்.
இராணுவமும் போலிசும் அவரை வேட்டையாடியது. 17 மாத தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்னர், வெள்ளை நிறத்தினர் அரசால், 1962 ஆகஸ்டு 5 இல் கைது செய்யப்பட்டு, முதலில் பிரிட்டோனியா தீவுச் சிறையிலும், பின்னர் ரோபன் தீவுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
1963 ஜூலை 11 இல், தென்னாப்பிரிக்க அரசின் காவல்துறை புரட்சிப் படையினர் 7 பேரை கைது செய்ததோடு, அரசைக் கவிழ்க்கும் சதிக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்ட வழக்கில், நெல்சன் மண்டேலாவும் கூண்டில் நிறுத்தப்பட்டார். மரண தண்டனையை எதிர்நோக்கி நின்றார்.
1964 ஜூன் 11 ஆம் நாள் நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்த பின்னர், மறுநாள் மரணதண்டனை விதிக்கப்படும் என்ற நிலையில், அந்த இரவில் தனது நாட்குறிப்பில் "நான் மரண தண்டனைக்கு ஆயத்தமாக உள்ளேன். சேக்ஸ்பியரின் சொற்கள் நினைவில் எழுகின்றன. மரணத்திற்காக உறுதியாக இரு, மரணமானாலும், வாழ்வானாலும் அது இனிப்பானதே!" என்று எழுதினார். தென்னாப்பிரிக்காவில் மட்டும் அல்ல, உலகெங்கும் உள்ள கோடான கோடி மக்கள் மண்டேலாவின் உயிர் பலியிடப்படுமோ என நெஞ்சம் நடுங்கினர். கறுப்பு இன மக்கள் பதறித் துடினத்தனர். நீதிமன்றம், ஆயுள் தண்டனை என்றது.
ரோபன் தீவுச் சிறையில், கொடூரமான துன்பங்களை அனுபவித்தார். பாறைகளை உடைத்து, சுண்ணாம்புக் கல் குவாரியில் கொதிக்கும் நெருப்பு வெயிலில் கல் உடைக்கும் வேலையில் வியர்வை சிந்தி உழைத்தார்.
1973 இல் டிரான்ஸ்காய் மாநிலத்தில் மட்டும் மண்டேலா வசிப்பதாக இருந்தால் விடுதலை செய்ய வெள்ளை அரசு முன்வந்தது. மண்டேலா அதை நிராகரித்தார். "தமது கருப்பர் இன மக்கள் முழு விடுதலை கிடைக்கும் வரை எனக்கு விடுதலை தேவை இல்லை" என அறிவித்தார். ஐ.நா.வின் பொதுச்சபை அவரை விடுவிக்கக் கோரியது. அவரை விடுவிக்கவும், நிற வேற்றுமைக் கொடுமையை ஒழிக்கவும் தீர்மானம் நிறைவேற்றியது.
வாழ்நாளில் 27 ஆண்டுகள் சிறைக்கொட்டடித் துன்பத்தை ஏற்றபின், 1990 பிப்ரவரி 11 இல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவின் அதிபரானார். மீண்டும் அதிபராகும் வாய்ப்பு இருந்தும், இரண்டாம் முறை போட்டியிடவில்லை.
1993 ஆம் ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசு நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது. அண்மையில்தான் "சுதந்திரத்திற்கான நீண்ட பயணம்" என்ற அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, கோடிக்காண மக்கள் அத்திரைப்படத்தைக் காண்கின்றனர்.
மண்டேலா எனும் கருப்பு வைரத்தின் ஒளி, விடுதலைக்குப் போராடுவோருக்கு வழிகாட்டும் மணிவிளக்கு ஆகும். காலத்தால் அழியாத காவியமாகவே உலகத்து மனித மனங்களில் ஒளிவீசி வாழ்கிறார்" என்று வைகோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT