Published : 06 Oct 2014 08:46 AM
Last Updated : 06 Oct 2014 08:46 AM
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ரோசய்யா
முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தியா கத் திருநாளாம் பக்ரீத் பெருவிழா இறை நம்பிக்கை, பகிர்வு உணர்வு, ஈகை, ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கட்டும்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனிதநேயம் தழைக்க, அர்ப்பணிப்பு உணர்வு டன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் உறுதி ஏற்போம். விட்டுக் கொடுத்தலும், ஈகை புரிதலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும். அனைவர் வாழ்விலும் வளமும், நலமும் பெருக வேண்டும் என்று நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
கருணாநிதி (திமுக தலைவர்)
ஒரு மனிதன் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் போதித்தவர் நபிகள் நாயகம். அதனால்தான், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி எனப் புகழ்ந்தனர். நபிகள் நாயகத்தின் போதனைகள் மனித சமுதாயத்துக்கு பொதுவானவை. நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்றி வாழும், முஸ்லிம் சமுதாய மக்கள் அனைவருக்கும், எனது உளமார்ந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)
ஏழைகள், பணக்காரர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமவாய்ப்பும், சம உரிமையும் கிடைத்திடவும், பகிர்ந்துண்டு வாழும் மனிதாபிமான போக்கு மலர்ந்திடவும், இந்த தியாகத் திருநாள் பயன்படட்டும். அனைத்து முஸ்லிம் பெருமக்களுக்கும் எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள்
வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்)
தள்ளாத வயதில், பெற்ற பிள்ளையைவிட கொண்ட கொள்கையாம் ஈமான் மிக உன்னதமானது எனக்கொண்டு, அப்பிள்ளையை பலியிடத் துணிந்த நபி இப்ராகிமின் தியாகம் என்றும் போற்றத்தக்கது. அந்த தியாகத்தை நினைவு கூர்ந்து, அகிலமெங்கும் ஏக இறைவனை வணங்கியும், ஏழைகளுக்கு வழங்கியும் வாழும் முஸ்லிம் பெருமக்களுக்கு நல்வாழ்த்துகள். வாழையடி வாழை என உறவு முறையுடன் வாழும் மரபை பேணி, சமய நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கட்டிக்காக்க சூளுரைப்போம்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்)
இறைவனின் கட்டளையை இறைத்தூதர் இப்ராகிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முகமது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்த நன்னாளில் அனைவரும் சபதம் ஏற்போம்.
பி.எஸ்.ஞானதேசிகன் (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்)
தியாகத்துக்கு இறையருள் உண்டு என்பதை காட்டும் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று முஸ்லிம் பெருமக் களால் மகிழ்ச்சியோடு கொண்டாடப் படுகிறது. இந்த நன்னாளில் நபிகள் நாயகம் (ஸல்) போதித்த நெறிமுறைகளை ஏற்று அனைத்து மத, இன மக்களிடையே நல்லிணக்கம் மேம்படவும், சமய ஒற்றுமை என்றும் பாதுகாக்கப் படவும் உறுதி ஏற்போம். மக்களிடம் அன்பு, பாசம், பரிவு இவைகள் ஏற்பட பிரார்த்திப்போம்.
ஆர்.சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்)
இறைப்பணியில் புனிதத்தை யும், அர்ப்பணிப்பையும் உலகுக்கு எடுத்துக் காட்டும் உன்னதத் திருநாள் பக்ரீத், அன்பின் மார்க்கத்தை அகிலமெங்கும் பறைசாற்றும் திருநாள். மக்களிடையே கசப்புகளும் காழ்ப்புணர்ச்சிகளும் நீங்கி சமாதானமாக, சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் மகத்துவம் மிக்க திருநாள். தியாக உணர்வையும் தர்மத்தையும் வலியுறுத்தும் இந்நன்னாளில் உலகமெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு என் அன்பு கலந்த நல்வாழ்த்துகள்.
டாக்டர் சேதுராமன் (மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர்)
இறைத்தூதர் நபிகள் நாயகம் போதித்த சமாதானம், சகோதரத்துவம் ஆகியவற்றை மனித வர்க்கம் சிந்திக்க வேண்டிய நேரம் பக்ரீத் பெருநாள். இந்த நாளில் கண்ணியமிகு காயிதே மில்லத் வழியில் நடந்து சமூக நல்லிணக்கம் மலர சூளுரைப் போம்.
தெகலான் பாகவி (எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர்)
தியாகத்தை போதித்திடும் இந்நன்னாளில் மக்களிடையே அன்பும், சமாதானமும் தழைத் திடவும், மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் ஓங்கிடவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு உயர்ந்திடவும் தியாகங்கள் பல செய்திட சபதம் ஏற்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT