Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM
ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட மாணவரை துப்பாக்கிச் சூடு நடத்தி 5 மணி நேரத்துக்குள் போலீஸார் மீட்டனர். மது அருந்துமிடத்தில் இந்த சதி உருவானது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை தபால்தந்தி நகரைச் சேர்ந்த உருளைக்கிழங்கு வியாபாரி ரவிச்சந்திரன் மகன் கிரண் ரோஹித் (14). தனியார் பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வருகிறார். திங்கள்கிழமை மாலை பள்ளி வாகனத்தில் இருந்து தபால்தந்தி நகரில் இறங்கிய கிரண்ரோஹித்தை காரில் மர்மநபர்கள் கடத்திச் சென்றனர்.
ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்
மாலை 5.27 மணிக்கு ரவிச்சந்திரனைத் தொடர்புகொண்ட மர்ம நபர், ‘உனது மகன் மீண்டும் கிடைக்க வேண்டுமெனில் ரூ.1 கோடி தர வேண்டும், என மிரட்டினார். இதனால் ரவிச்சந்திரன் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார்.
மாவட்ட எஸ்.பி. வி.பாலகிருஷ்ணன், துணை ஆணையர் தமிழ்ச்சந்திரன் மற்றும் போலீஸார், ரவிச்சந்திரனிடம் விசாரித்தனர். மிரட்டல் வந்த தொடர்பு எண்ணை கண்காணித்தபோது திருச்சி, புதுக்கோட்டை, திருவெறும்பூர் பகுதி
களில் மர்மநபர் இருப்பதாக சிக்னல் மூலம் தெரியவந்தது. உஷாரான போலீசார் இதுபற்றி திருச்சி சரக டிஐஜி அமல்ராஜுவுக்குத் தகவல் தெரிவித்தனர். மீண்டும் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபரிடம் ரூ.30 லட்சத்தை ஏற்பாடு செய்துள்ளதாக ரவிச்சந்திரன் தெரிவித்தார். அந்தப் பணத்துடன் காரில் ரவிச்சந்திரனும்,
சீருடை அணியாத போலீஸ் ஒருவரும் புறப்பட்டனர். கடைசியாக இரவு 8.01 மணிக்கு பேசியபோது, மர்மநபரின் செல்போன் கீரனூர் அருகே கிள்ளுக்கோட்டை பகுதியில் இருப்பதாகக் காட்டியது. தகவலறிந்த கீரனூர் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மற்றும் போலீஸார் அங்கு விரைந்தனர்.
போலீஸ் துப்பாக்கிச் சூடு
வேகமாக வந்த காரை வழிமறித்த போது நிற்காமல் சென்றது. போலீசார் அவர்களை விரட்டிச்சென்று தங்களது வாகனத்தை காரின் முன் நிறுத்தினர். காரில் இருந்த 4 பேர்மாணவரை விட்டுவிட்டு தப்ப முயன்றனர். அப்போது ஒரு நபர் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்றார். சுதாரித்த இன்ஸ்பெக்டர், அந்த நபரின் காலில் துப்பாக்கியால் சுட்டார். அந்த நேரத்தில் மேலும் 3 பேர் காட்டுப்பகுதிக்குள் இறங்கி தப்பினர். மாணவரை மீட்ட போலீசார், காயமடைந்த நபரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அவர் திருச்சி ஈ.பி. ரோடு கமலா நகரைச் சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்தது.
கரும்புத் தோப்பில் கடத்தல்காரர்
செவ்வாய்க்கிழமை காலை பள்ளத்துப்பட்டி என்ற கிராமத்திலுள்ள கரும்புத் தோட்டத்தில் மர்மநபர் மறைந்திருப்பதாகத் போலீசாருக்குத் தெரியவந்தது. பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியைச் சேர்ந்த பிரபு (35) என்பதும், மாணவரின் தாத்தாவிடம் கார் டிரைவராக முன்பு பணியாற்றிய இவர்தான், இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டதாகத் தெரியவந்தது. அவரை மதுரைக்கு அழைத்துவந்து விசாரித்து வருகின்றனர். அவர் அளித்த தகவலின்பேரில் கடத்தலில் ஈடுபட்ட சாணார்பட்டியைச் சேர்ந்த குமார், சந்துரு ஆகிய 2 பேரையும் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் கீரனூர் நீதிமன்றத்தில் குமார் சரணடைந்தார்.
குடிபோதையில் உருவான சதி
பிரபுவிடம் விசாரித்த ஊமச்சிகுளம் போலீசார் தெரிவித்ததாவது: பிரபு, குமார், சந்துரு 3 பேருமே ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். குமார், சந்துரு மீது ஏற்கெனவே வழக்கு உள்ளது. இந்நிலையில் 3 பேரும் அண்மையில் ஒருநாள் மது அருந்தியபோது பணக்கஷ்டம் குறித்து கூறியுள்ளனர். அந்த சமயத்தில்தான், யாரையாவது கடத்தி பணம் பறிக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளனர். இதில் ரவிச்சந்திரன் குடும்பம் பணம் அதிகமுள்ள குடும்பம், பிரச்சினைக்கு போகமாட்டார்கள் என்பது பிரபுவுக்கு தெரிந்திருக்கிறது. அவரது யோசனையின்படிதான் இந்த கடத்தல் அரங்கேறியது என்றனர்.
செய்தியாளர்களிடம் மதுரை மாவட்ட எஸ்.பி. வி.பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘மாணவர் அணிந்திருந்த மகாத்மா பள்ளியின் சீருடையையும், மாணவரின் புகைப்படத்தையும் செல்போன் மூலம் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பினோம். அதை வைத்தே காரில் இருந்த மாணவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்’என்றார்.
கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மாணவர் திங்கள்கிழமை இரவே அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT