Published : 18 Oct 2013 11:00 AM
Last Updated : 18 Oct 2013 11:00 AM
இமாம் அலியை காட்டிக் கொடுத்தவர்களையும் என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்திய போலீஸ் அதிகாரிகளையும் பழி தீர்க்க தீவிரவாதிகளின் புதிய அமைப்பு திட்டமிட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
‘அல்-முன் தஹீம் ஃபோர்ஸ் (ஏ.எம்.எஃப்)’ போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்துக் கொண்டிருக்கும் சிறப்பு புலனய்வுப் பிரிவு அதிகாரிகள் இப்போது அதிகமாக இதைத்தான் உச்சரிக்கிறார்கள். போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பாண்டு அலி, அபுபக்கர் சித்திக், செருப்புக்கடை சையது, பன்னா இஸ்மாயில் இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இமாம் அலியின் ஜிகாத் படையில் இருந்தவர்கள். 29.09.2002-ல் இமாம் அலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு இந்த ஜிகாத் படை 3 அணிகளாக பிரிந்துவிட்டது. அதில் ஒன்று போலீஸ் பக்ருதீன் தலைமையிலான அணி. இந்த அணிக்கு வெளிப்படையாக பெயர் எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், ‘ஜிஹாத்’ என்ற பெயரை உள்ளுக்குள் வைத்திருக்கிறார்கள்.
‘இஸ்லாத்துக்கு எதிரான இந்துக்களையும் அவர்களை வழி நடத்திச் செல்லும் தலைவர்களையும் பழி தீர்ப்போம்’ என்பதுதான் ஜிஹாத்துக்கு இவர்கள் தரும் விளக்கம். இவர்கள் இல்லாமல், இன்னொரு கோஷ்டி 2004-ல் புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கியது. அதுதான் அல்-முன் தஹீம் ஃபோர்ஸ்! இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களில் சிலரை தற்போது வளைத்துப் பிடித்திருக்கிறது சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸ். பிடிபட்ட நபர்களை வைத்து இன்னும் சிலரையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வியாழன் மாலை நமக்குக் கிடைத்த இந்தச் செய்தியை உறுதிப்ப டுத்துவதற்காக போலீஸ் வட்டாரத்து அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தோம். அவர்கள் தந்த தகவல்கள் அதிர வைப்பவையாகத்தான் இருந்தன.
“அல்-உம்மா தீவிரவாதிகள் அல்-முன் தஹீம் ஃபோர்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி ரகசியமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது உண்மைதான். இதை அவர்கள், ‘பழிவாங்க உறுதிமொழி ஏற்கும் படை’ என்று சொல்கிறார்கள். 2004-ல் மதுரை மற்றும் சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு இந்த அமைப்பின் பெயரில் ஒரு கடிதம் வந்தது.
அதில், ‘இமாம் அலியை காட்டிக் கொடுத்தவர்களையும் அவரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரிகளையும் பழி தீர்க்காமல் விடமாட்டோம்’ என்று இருந்தது. கடிதத்தில் இருந்த கையெழுத்தை வைத்து, மதுரையைச் சேர்ந்த ஜெய்னுல் ஆரிப் என்பவரை பிடித்து விசாரித்தோம். ஆனால், கடிதத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என அவர் மறுத்துவிட்டார்.
அத்துடன் ஆளைத் தேடு வதை விட்டுவிட்டு, போலீஸ் இன்ஃபார்மர்களுக்கும், இமாம் அலி ஆபரேஷனில் இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களுக்கு தெரியாத வகையில் பலப்படுத்தினோம். கடிதம் எழுதியவர்கள் அத்தோடு நிற்கவில்லை. காரியத்திலும் இறங்கினார்கள். அதுபோன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை நாங்கள் எச்சரிக்கையோடு இருந்து காப்பாற்றியும் இருக்கிறோம்.
பொதுவாக மதத் தீவிரவாதிகள் ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியுடன் தொடர்பில் இருக்க மாட்டார்கள். ஆனால், போலீஸ் பக்ருதீன் சம்பந்தப்பட்ட சில விஷயங்களில் அல்-முன் தஹீம் ஃபோர்ஸை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
மதுரை மற்றும் நெல்லை பகுதிகளில்தான் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அல்-முன் தஹீம் ஃபோர்ஸை சேர்ந்த முக்கிய நபர்கள் சிலரையும் போலீஸ் படை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. விசாரணையின் போக்கு பாதிக்கக்கூடும் என்பதால் இப்போதைக்கு இதற்கு மேல் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்” என்று கூறி முடித்துக் கொண்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT